கோலாலம்பூர் | மார்ச் 1
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் பொங்கலே தமிழர்களின் தன்மான விழா என மலேசிய கிறித்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தலைவர் கவிஞர் ஆ. கி. டேவிட் (பொன் பூங்குன்றன்) தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாளேடுகளிலும் மின்னியல் ஊடகங்களிலும் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்துள்ள பொங்கள் – தமிழ்ப்புத்தாண்டு பற்றி தாம் கவனித்து வருவதாகவும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்றிருக்க இவ்விவகாரத்தில் வாத – விவாதங்கள் அவசியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் விழா பற்றி கருத்துரைத்த அவர், சமயம் சார்ந்தப் புத்தாண்டாக எங்களுக்கு சனவரி 1ஆம் நாள் இருந்தாலும் தமிழரின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழாவை சமயம் சாராமல் இனத்தின் அடிப்படையில் நாங்களும் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். மலேசியாவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய கிறித்துவ தமிழ் வளர்ச்சிப் பேரவை இதனை செய்து வருகிறது.
இன்றைய சூழலில் நாட்டிலுள்ள ஒரு சிலர் பொங்கலுக்குச் சமய சாயம் பூசியும், சித்திரைப் புத்தாண்டினைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிப்பதுமாக இருக்கிறார்கள். சித்திரைப் புத்தாண்டு என்பது இந்து சமய விழா; இந்துக்களுக்குப் புத்தாண்டு.
தை முதல் நாள் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் புத்தாண்டு. அது இந்துக்கள் மட்டும் கொண்டாடக் கூடிய சமய விழா அல்ல என ஆ.கி. டேவிட் தெரிவித்தார்.
பண்பாட்டு விழாவான தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு – பொங்கல் விழாவுக்கு சமய விழா என அடையாளமிட்டு, அந்த அடையாளத்தின் பெயரில் ஒரு சமயத்துக்கு மட்டும் உரிமை கொண்டாடுவது என்பது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.
உழவர் திருநாளை நாம் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என அறிஞர்கள் அன்று முதல் இன்று வரை வலியுறுத்தி வருவதை நாம் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
இப்படி சமயம் சாராத விழாவுக்கு குறுகிய மனப்பான்மையுடன் ஒரு சமயச் சாயம் பூசுவது மனதை வேதனைக்குள்ளாக்குகிறது என ஆ. கி. டேவிட் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். எனவே, இதனை அந்த ஒரு சிலர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.
ஆகவே, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும், பொங்கல் விழா சமயம் சாராத அனைவருக்குமான ஒரு பண்பாட்டு விழா எனும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆ. கி. டேவிட் சொன்னார்.





