மென்செஸ்டர், செப்.21-
2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் யுனைடெட் நான்காவது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4 – 1 என்ற கோல்களில் பெர்டன் அல்பியோன் அணியை எளிதில் வீழ்த்தியது.

ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் முதல் 20 நிமிடங்களில் 2 – 0 என்ற கோல்களில் முன்னணி வகித்தது. மென்செஸ்டர் யுனைடெட்டின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் மார்கோஸ் ராஷ்போர்ட் அந்த இரண்டு கோல்களையும் புகுத்தினார்.
முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் மூன்றாவது கோலை ஜெசி லிங்காட் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தையும் மென்செஸ்டர் யுனைடெட் முழுமையாக ஆக்கிரமித்தப் போதிலும் ஒரு கோலை மட்டுமே போட முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 15 நிமிடங்களில் அந்தோனி மார்சியல் அந்த கோலைப் போட்டார்.

பெர்டனுக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ ஒன்பது மாற்றங்களை செய்திருந்தார். மென்செஸ்டர் யுனைடெட் கேப்டன் மைக்கல் கேரிக், இந்த பருவத்தில் முதல் முறையாக அந்த அணியில் களமிறங்கினார்.
பெர்டனுக்கு எதிரான ஆட்டத்தில் தமது தாக்குதல் ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தில் மனநிறைவு அடைவதாக மொரின்ஹோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


