கோலாலம்பூர், மே 21-
தமிழக சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் மூன்றாவது நிலையில் வெற்றி பெற்ற ஹேமித்ரா ஒட்டுமொத்த மலேசியாவிற்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
“ மலேசிய சுவர்ணலதா என்று அழைக்கும் அளவுக்கு இப்போட்டியில் இவரின் திறன் வெளிப்பட்டது. இவரின் இந்த ஆற்றலுக்காக இவரை நாம் சிறப்பு நிகழ்ச்சி வழி கௌரவிக்க வேண்டும் “என்று வரும் ஜூன் 28 ஆம் தேதி தலைநகரில் நடைபெறும் சரிகமப நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான விஷால் குறிப்பிட்டார்.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஹேமித்ரா சிறப்பிக்கப்படுவார் என்றார் அவர்.
“இவருக்கு ஒட்டுமொத்த மலேசியர்கள் சார்பில் நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் “என்று உள்ளூர் கலைஞர்கள் மற்றும் தமிழகக் கலைஞர்கள் இணைந்து வழங்கவிருக்கும் ‘சரிகமப ’ இசை நிகழ்ச்சியையொட்டி இங்குள்ள உணவக மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.
இச்சந்திப்பில் மலேசிய தஸ்லி நிறுவன உரிமையாளர் டத்தோ ரவி, டத்தோ ஹரி கிருஷ்ணன்,சுரேன் கந்தா, தாமரை ஜுவலர்ஸ் உரிமையாளர் டத்தோ கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மலேசிய பாடகி ஹேமித்ரா தமிழகத்தில் வெற்றி பெற்று நம் நாட்டுக்கு பெருமையைச் சேர்த்துள்ளார். மக்கள் அனைவரும் இவருக்கு ஆதரவு தருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
‘சரிகமப’ இசை நிகழ்ச்சி, இசைப் பிரியர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமைவதோடு இரு நாடுகளின் கலைஞர்களை ஒன்றிணைக்கும் புதிய முயற்சியாகவும் திகழ்கிறது.
இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 28ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தலைநகர், செராஸ், டேவான் வவாசான் மெனாரா பிஜிஆர்எம்மில் நடைபெறும்.
இதற்கான டிக்கெட்டுகளை டிக்கெட் டூ யூ எனும் இணையதளம் மூலம் ரசிகர்கள் வாங்கலாம்.


