ஷா அலாம், ஜூலை 8-
சைபர்ஜெயாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி மணீஷாப்ரீத் கவுர் அகாரா எனும் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேகப்பேர்வழியான ஆடவர் மீது விரைவில் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாடவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலைக்காக குற்றம் சாட்டப்படுவார் என சிலாங்கூர போலீஸ்த் தலைவர் ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சிபாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று ஹுசைன் ஒமார் கான்னை மேற்கோள் காட்டி ஹரியன் மெட்ரோ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், இன்றிரவு பத்திரிகையாளர்களிடம் பேசிய சிப்பாங் போலீஸ்த் தலைவர் நோர்ஹிசாம் பஹாமான், முதன்மை சந்தேகப்பேர்வழி மீது, குற்றம்சாட்டும் நடைமுறை இன்னும் தீர்மானிக்கப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.
மாணவி மணீஷாப்ரீத் கவுர் அகாரா கொலையைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி காலை 9 மணிக்கும் மறுநாள் அதிகாலை 2 மணி இடைப்பட்ட நேரத்தில், ஜொகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானின் கெமென்சே ஆகிய பகுதிகளில், 19 மற்றும் 20 வயதுடைய ஓர் ஆடவரையும் இரண்டு பெண்களையும் போலீஸ் கைது செய்திருந்தது.
முதலில் ஜூலை 3ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆம்மூவரது தடுப்புக்காலம் ஜூலை 10ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.
அடுக்ககம் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மணீஷாப்ரீத்தை, மூன்று சந்தேகநபர்களும் அறிந்துள்ளதாக,முன்னதாக, நோர்ஹிசாம் கூறியிருந்தார்.
உடற்கூறு சோதனையில், மணீஷாப்ரீத் மரணத்திற்கு தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இருந்தது என தெரியவந்தது. அவர் தங்கியிருந்த வீட்டை யாரும் உடைத்துக்கொண்டு நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை என்றும், பாலியல் வன்கொடுமைக்கு ஏற்புடைய காயங்களும் அம்மாணவியின் உடலில் இல்லை என்றும் போலீஸ் தெரிவித்திருந்தது.
மணீஷாப்ரீத்தின் கொலையைத் தொடர்ந்து, முதன்மை சந்தேகநபரான ஆடவர், மணீஷாப்ரீத்தின் பணப்பட்டுவாடா அட்டையைப் பயன்படுத்தி 5 முதல் 6 ஏடிஎம்களில் பணம் எடுத்ததாக போலீஸ் இதற்குமுன்பு, தெரிவித்திருந்தது.
அத்துடன், மணீஷாப்ரீத்தின் மடிக்கணினி, கைபேசி மற்றும் பணமும் திருடப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.


