கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் ஊகங்களை அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முற்றாக நிராகரித்துள்ளார்.
கட்சியில் வெவ்வேறு அணிகள் செயல்படுவதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் கீழ் கட்சி எஃகு கோட்டையாக ஒற்றுமையுடன் திகழ்வதாக உறுதிபடத் தெரிவித்தார்.
தலைவர்களிடையே அவ்வப்போது எழும் மாறுபட்ட கருத்துக்கள் கட்சியின் பலவீனத்தைக் காட்டவில்லை, மாறாக அது ஒரு துடிப்பான ஜனநாயக இயக்கத்தின் அடையாளம் என்று அவர் வர்ணித்தார்.
“கருத்து வேறுபாடுகள் என்பது ஆரோக்கியமான அரசியலின் ஒரு பகுதி. அதை ஒரு பிளவாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை; பிகேஆர் எப்போதும் ஒரே அணியாகவே இயங்குகிறது,” என்று அவர் உள்நாட்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி ஆகியோருக்கு இடையிலான பகிரங்கமான கருத்துப் பரிமாற்றங்கள், கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டிய ரமணன், அத்தகைய பார்வைகள் தவறானவை என்றார்.
பிகேஆர் போன்ற ஒரு பெரிய இயக்கத்தில் பலதரப்பட்ட சிந்தனைகள் இருப்பது இயல்பு என்றும், அவை கட்சியின் கொள்கைகளை மேம்படுத்தவே உதவும் என்றும் அவர் விளக்கினார்.
கட்சிக்குள் எழும் எத்தகைய சவால்களும் முறையான உள்வழிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மூலமே தீர்க்கப்படுகின்றன. விவாதங்கள் அனைத்தும் பொறுப்புணர்வுடன் நடத்தப்படுவதால், அவை கட்சியின் நிலைத்தன்மையையோ அல்லது பொதுமக்கள் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையையோ ஒருபோதும் பாதிக்காது என்பதை அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் பிகேஆர் கட்சியின் முழுக் கவனமும் ஒற்றுமை அரசாங்கத்தின் பலத்தை உறுதிப்படுத்துவதிலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே உள்ளது. தேவையற்ற வதந்திகளைப் பரப்பி கட்சியைப் பிரிக்க நினைப்பவர்களின் முயற்சிகளுக்குத் தலைவர்கள் யாரும் பலியாக மாட்டார்கள் என்றும், சீர்திருத்தப் பாதையில் அனைவரும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த பொதுத்தேர்தல் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான ஒத்துழைப்பு குறித்துப் பேசிய அவர், தற்போதைய முன்னுரிமை சிறந்த நிர்வாகத்தை வழங்குவது மட்டுமே என்றார்.
‘மடானி’ அரசாங்கத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் இணக்கமாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ரமணன், தேர்தல் தொடர்பான முடிவுகள் சரியான நேரத்தில் முறையான ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

