ஷா ஆலம், 31 அக்டோபர்:
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 350 இந்திய மாணவர்கள், 2026ஆம் ஆண்டுக்கான SYSCORE இளம் ஆய்வாளர் விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினரிடையே புத்தாக்கச் சிந்தனைகளையும் அறிவியல் ஆய்வுத் திறன்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இவ்விருது விழாவில், இவ்வாண்டு சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் விருது பெற்ற மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பேர், வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர், செயற்கை நுண்ணறிவு (AI), விவசாயப் புத்தாக்கம் மற்றும் ரோபோட்டிக் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்று SYSCORE தோற்றுநர் காளிதாசன் கணேசா தெரிவித்தார்.
மாணவர்களின் படைப்புகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும் என்றும், 85 விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர், ஷா ஆலமில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான SYSCORE இளம் ஆய்வாளர் விருது விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும், SYSCORE ஏற்பாடு செய்யும் புத்தாக்கப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே, விருதுகளைப் பெற்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பயிற்சிகள் எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.


