கோத்தா கெமுனிங்: முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, முஸ்லிம் அல்லாத மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
மலாக்கா, புக்கிட் காத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி (BN) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மிகவும் மோசமான முஸ்லிம் ஆட்சியாளராக இருந்தாலும், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரைப் போன்று கொடூரமானவராக இருக்கமாட்டார் என ஹாடி அவாங் கூறியதாக வெளியான செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய கருத்துகள் முஸ்லிம் அல்லாத மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுடன், தலைவர்களின் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலன் சார்ந்த கடமைகளையும் மதத்தின் அடிப்படையில் மதிப்பிடும் நிலையை உருவாக்குவதாக பிரகாஷ் தெரிவித்தார்.
ஒரு தலைவர் மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், அவர் முஸ்லிம் என்பதற்காக அவரது தவறு குறைந்துவிடுமா என்றும், முஸ்லிம் அல்லாத தலைவர் நேர்மையுடன் மக்களுக்குச் சேவையாற்றினால் அவரை எந்த அடிப்படையில் அநீதியானவர் எனக் கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களிடம் பொதுப் பண நிர்வாகம், வெள்ளப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அனைத்து மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே எதிர்பார்க்கின்றனர். தலைவர்களின் செயல்பாடுகள் மதத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹாடி அவாங்கின் கருத்தை அம்னோ (UMNO), மலேசிய சீன சங்கம் (MCA), மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) மற்றும் ஜெராக்கான் (Gerakan) ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனவா அல்லது நிராகரிக்கின்றனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரகாஷ் சம்புநாதன், தேர்தலுக்கு முன்பாக இதுகுறித்து மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


