பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24-
நாட்டில் சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைக்கும் பொருட்டு போக்குவரத்துக் குற்றங்கள் புரிவோரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டக்கூடிய குற்ற வகைகளை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) ஆராய்ந்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நட்ஸ்ரி சிரோன் தெரிவித்தார்.
இதில் அவசரப் பாதையைப் பயன்படுத்துவதோடு வாகனம் ஓட்டும் நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்துதல், சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லுதல், பாதுகாப்பு
வார்ப்பட்டை மற்றும் தலைக்கவசத்தை அணியாது இருத்தல், வரிசையில் இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்லுதல், பேருந்து மற்றும் டாக்சிக்கான பாதையைப் பயன்படுத்துதல் ஆகிய 6 குற்றங்கள் இதில் முக்கியமாக பட்டியலிடப்பட உள்ளன.
தற்போதைக்கு பெருநாள் காலங்களில் 7 வகையான போக்குவரத்துக் குற்றங்கள் புரிவோர் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர். இந்தக் குற்ற வகைகளுக்கான தண்டனையை அமல்படுத்த சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் (மிரோஸ்), சாலைப் பாதுகாப்புத் துறை (ஜேகேஜேஆர்), போலீஸ் ஆகியவற்றிடமிருந்து பதில்களை ஜேபிஜே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இப்போது இக்குற்றங்கள் அனைத்தும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு கேமராவில் (அவாஸ்) பதிவு செய்யப்பட்டு விட்டதால் அதிலிருந்து தப்பிப்பதைத் தவிர்க்க இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ள ஜேபிஜேவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவாஸ் முறையின் கீழ் அபராதம் மற்றும் வாகன உரிமத்தை ரத்துச் செய்யும் தண்டனையும் விதிக்கப்படும். இக்குற்றங்களுக்கு நீதிமன்றத்திலும் தண்டனை விதிக்கப்படும் என்பதால் முதலில் இக்குற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று நட்ஸ்ரி சிரோன் குறிப்பிட்டார்.


