Homeமலேசியாமே முதல் வாரத்தில் 14 ஆவது பொதுத் தேர்தல் ?

மே முதல் வாரத்தில் 14 ஆவது பொதுத் தேர்தல் ?

கோலாலம்பூர், ஏப்.1 –

14 ஆவது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற ஆருடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மே மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என பெரித்தா ஹாரியான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

14 ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இந்த வாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 ஆவது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவுப் பெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 4 ஆம் தேதி பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என முதலில் ஆருடம் கூறப்பட்டது.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவியேற்று ஏப்ரல் 3 ஆம் தேதியோடு 9 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார். கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதிதான் நஜிப் நாடாளுமன்றத்தை கலைத்தார் என்பது குறிப்பிடதக்கது. எனினும் இம்முறை நஜிப், நாடாளுமன்ற கூட்டம் முடிந்த மறு நாள் அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 4 ஆம் தேதி அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்கவுள்ள நஜிப் அதன் பின்னர் சரவா மாநிலத்தில் பிந்துலூ, மீரி போன்ற இடங்களுக்கு வருகை அளிக்கவுள்ளார். ஏப்ரல் 5 ஆம் தேதி அவர் மீண்டும் கோலாலம்பூர் திரும்பவுள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி அவர் நாடளுமன்றத்தை கலைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 7 ஆம் தேதி சனிக்கிழமை புக்கிட் ஜாலிலில் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையை பிரதமர் வெளியிடவிருக்கிறார். தேர்தல் கொள்கையை வெளியிடும் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படவிருக்கிறது.கடந்த 2013 ஆம் ஆண்டில் ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்தப் பின்னர் பிரதமர் ஏப்ரல் 6 ஆம் தேதி தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என கணிக்கப்படுகிறது. அதேவேளையில் மே 5 அல்லது 6 ஆம் தேதி 14 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் போர் முரசு கொட்டும் நேரம் நெருங்கி விட்டது. இனி அடுத்து வரும் ஒரு மாதம் தேர்தல் பரப்புரைகளால் மலேசியா அதிரவிருக்கிறது.

spot_img

latest articles

explore more