Homeசமூகம்வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!! டத்தோ லோகாவிற்கு எதிராக புகார்

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!! டத்தோ லோகாவிற்கு எதிராக புகார்

கோலாலம்பூர், ஏப்.1-

ஜாலான் ஈப்போ, தாமான் பெம்பூ கார்டனிலுள்ள ஸ்ரீ விஜய துர்க்கையம்மன் ஆலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆலயம் சேதம் அடைந்ததோடு, மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது. இந்த ஆலயத்தை மறுசீரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தும் கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகபால மோகன் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஆலயத்தின் குருக்களும் ஸ்தாபகருமான வினேஷ் பாலகிருஷ்ணன் (வயது 28) புகார் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் ஆலயத்தை புதுப்பித்து தரும்படி ஆலயத்தின் முன் பதாகைகளை ஏந்தி கோரிக்கையை முன்வைத்தார்கள். மார்ச் மாதம் ஆலயத்தில் தீ சம்பவம் ஏற்பட்டது. குறிப்பாக, ஆலயத்தின் மின்சார கட்டுப்பாட்டு பெட்டியில் ஏற்பட்ட தீ ஆலயத்தின் அலுவலகம் முதலானவற்றிற்கும் பரவியது.

விளம்பரம்

முன்னதாக கடந்த 24ஆம் தேதி ஆலயத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் தெய்வ சிலைகளை உடைத்து அதன் கீழ் உள்ள எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சிம்மம், பலிபீடம் ஆகிய சிலைகளை பெயர்த்தெடுத்து அதிலுள்ள எந்திரங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துள்ளனர்.

அதற்கு முந்தைய ஆண்டில் ஆலயத்தின் மூல ஸ்தானத்தில் இருக்கும் துர்க்கையம்மனின் சிலை உடைக்கப்பட்டு அதிலுள்ள எந்திரங்கள் முதலான பொருட்களை அடையாளம் தெரியாதவர்கள் திருடியுள்ளனர். இந்த ஆலயத்தில் தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் தருகின்றது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆலயம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நிலத்தில் உள்ளது. ஆலயம் குறித்து விளக்கம் அளித்த கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகபால மோகன், ஆலயத்தை கூடிய விரைவில் புதுப்பித்துத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவரை நேரடியாகச் சந்திக்க பல முறை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவரைச் சந்திக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். அதோடு இந்த விவகாரம் குறித்து டத்தோ லோக பால மோகனின் அதிகாரி சத்தியா சுதாகரையும் அணுகினோம். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை என்றார் வினேஷ் பாலகிருஷ்ணன்.

ஆலயத்தில் மின்சாரம் இல்லாததால், பூட்டி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாளை தரிசிக்க முடியாமல் இங்குள்ள குடியிருப்பாளர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஆலயத்தை புதுப்பிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். அதோடு இதர சமூக தலைவர்களும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டார்கள்.

spot_img

latest articles

explore more