லண்டன், ஏப்.2 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அர்செனல் 3 – 0 என்ற கோல்களில் ஸ்டோக் சிட்டியை வீழ்த்தியது. இந்த தோல்வியால் ஸ்டோக் சிட்டி பிரீமியர் லீக் போட்டியில் இருந்து தகுதி இறக்கம் காணும் நிலையில் உள்ளது. இன்னும் ஆறு லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் ஸ்டோக் சிட்டி பட்டியலில் 19 ஆவது இடத்தில் உள்ளது.

எமிரேட்ஸ் அரங்கில் நடந்த ஆட்டத்தில் அர்செனல் முதல் பாதியில் எந்த ஒரு கோலையும் போடவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அர்செனல் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் பினால்டியின் மூலம் பியேரி அவ்பாமேயாங் அர்செனலின் முதல் கோலைப் போட்டார். 11 நிமிடங்களுக்குப் பிறகு அவ்பாமேயாங் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் எஞ்சியிருந்தபோது மீண்டும் பினால்டியின் வழி அலெக்சாண்டர் லக்கசாட், அர்செனலின் 3 ஆவது கோலைப் புகுத்தினார். இந்த வெற்றியின் மூலம் அர்செனல் 51 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நான்காவது இடத்தைக் காட்டிலும் அர்செனல் 10 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.



