கோலாலம்பூர், ஜூலை 31-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அடையாள அட்டையை வெளியிட்டது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டாக்டர் மகாதீரின் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் வெளியிட்டதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கூலாய் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மக்களவை நபாநாயகரிடம் தாக்கல் செய்தார்.
உள்துறை அமைச்சராக இருக்கும் ஸாஹிட் மகாதீரின் சொந்தத் தகவல்களை வெளியிட்டதற்கான நோக்கம் என்னவென்பதை அவர் விளக்க வேண்டுமென்றும் தியோ வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த தீர்மானம் மன்றத்தின் நிலைவிதி 18(1) மற்றும் (2)இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.
அண்மையில் கிளானா ஜெயா அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசிய ஸாஹிட், டாக்டர் மகாதீரின் பழைய அடையாள அட்டையின் நகலைக் காட்டி, அதில் அவரின் பெயர் மகாதீர் த/பெ இஸ்காண்டார் குட்டி என இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த விவரங்கள் தேசிய பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ யாஸிட் ரம்லி அளித்துள்ளார்.
அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் சம்பந்தப்பட்டவருக்கே சொந்தமானது. கிளானா ஜெயா கூட்டத்தில் அந்த விவரங்களை அவர் வேண்டுமென்றே வெளியிட்டுள்ளார். இது நெறிமுறைக்கு மாறானது. அது தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். அம்மாதிரியான தகவல் வெளியிடப்படக்கூடாது. இதன் மூலம் ஸாஹிட் அவர் சட்டத்தை மதிக்கவில்லை என்ற சந்தேகம் எழுவதாகவும் ஸாஹிட் உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு அவர் மீது போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


