14ஆவது பொதுத் தேர்தலை அறிவிக்கும் காலம் கனிந்து விட்டதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அது எப்போது நடக்கும் என்று அறிவிக்காத நிலையில், அது சம்பந்தமான செய்திகள் ஊடக
ங்களில் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.
அண்மையில் ஜோகூர் அம்னோ கூட்டம் ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, 14ஆவது பொதுத் தேர்தலுக்குத் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட விரும்பக் கூடியவர்களையும் தேர்தலில் வெற்றி பெறக்கூடியவர்களை மட்டுமே நிறுத்தும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேட்பாளர் வெற்றி பெறக்கூடியவராக இருக்கும்போது அவர் நிச்சயமாக அனைவராலும் விரும்பக்கூடியவராகவே இருப்பார். விரும்பக் கூடியவராக இல்லாத ஒருவர் வெற்றிபெற நாம் விரும்ப மாட்டோம். எந்த வாக்காளர் அம்மாதிரியான வேட்பாளரை விரும்புவார். நிதிப் பிரச்னையில் இருப்பவரும் மனநிலை குன்றியவர்கள் மட்டுமே அம்மாதிரியான வேட்பாளரை ஆதரிப்பார்கள்.
விரும்பக் கூடியவர் வெற்றி பெற முடியாத வேட்பாளராகவும் இருக்கலாம். வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் அனைவரும் விரும்புவதற்கு மேலான குணாதிசயங்களைக் கொண்டிருக்கவும் வேண்டும். அம்மாதிரியானவர்களே அம்னோவுக்கு தேவைப்படுவர்.
ஒரு வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் எம்மாதிரியான கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சற்று சிந்திப்போம்.
வாழ்க்கையில் நேர்மையும் நெறிகளுமே வேட்பாளருக்கான கூறுகளாகும். லஞ்ச ஊழல் அற்றவர்களும் அரசுப் பணத்தைச் சிக்கனமாகவும் விரயமில்லாமலும் செலவழிக்கக்கூடியவர்களே மக்களுக்கு வேண்டும்.
வேட்பாளருக்கு நுண்ணறிவு முக்கியமாகத் தேவைப்படுகிறது.
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு நல்ல கருத்துகளை வெளிப்படுத்த துணிவில்லாதவர்கள் நமக்குத் தேவையில்லை. விஷய ஞானம் இல்லாமல் விவாதிக்கக் கூடிய விஷயங்களில் ஆழ்ந்த அறிவு ஞானம் இல்லாதவர்களும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாதவர்களும், எதிர்க்கட்சியினரை ஆள் வைத்து அடிப்பவர்களும் மற்றவர்களைக் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்துபவர்களும் அச்சுறுத்தல் விடுக்கும் வேட்பாளர்களும் நமக்குத் தேவையில்லையே!.
பதவிக்குத் தகுந்த திறமை வேட்பாளருக்கு இருக்க வேண்டும். போதுமான கல்வி இல்லாதவர்களால் வளர்ந்து வரும் நவீன பன்னாட்டு பொருளாதரம், அறிவியல் மற்றும் சமூகவியல், நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைப் புரிந்து கொண்டு விவாதம் செய்ய முடியாது. ஆக்கப்பூர்வ கருத்துகளை முன்வைக்கவும் இயலாது.
நாட்டின் உண்மையான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, நமது முன்னாள் தலைவர்களின் அர்ப்பணிப்பு உணர்வினைத் தெரிந்து கொண்டு அனைத்து இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நல்லிணக்கத்தைப் பேணுபவர்களே நமக்குத் தேவை.
தீவிரவாதமும் பயங்கரவாதத்தையும் வழக்கமாகக் கொண்டு இன, சமய விவகாரங்களைக் குழப்பி, கைத்தட்டல் வாங்கி வயிறு வளர்க்கும் வேட்பாளர்களால் என்ன நன்மை? அம்மாதிரியானவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். வாக்காளர்களால் தவிர்க்கப்படவும் வேண்டும்.
மக்களைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர்கள் ஐநா பரிந்துரைத்துள்ள 17 கூறுகளைக் கடைப்பிடிக்க முடியாத வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும்.
நடந்து முடிந்த பல பொதுத் தேர்தல்களில் மிகவும் விரும்பக் கூடியவர்களே வென்றிருப்பதால் அந்த வழி முறையே தேர்தலில் கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார். இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.
ஆயினும், அந்த மிகவும் விரும்பக்கூடிய வேட்பாளர் இன, சமயவாதியாகவும், வெறியராகவும், ஊழல்வாதியாகவும் அயோக்கியராகவும் இருந்தால் என்ன செய்வது? இது பதிலளிப்பதற்குச் சிரமமான கேள்வியாகும். எனினும் அதனை விமர்சித்தே ஆக வேண்டும். ஜனநாயகம் தழைக்க அம்மாதிரியான குணம் கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கவும் வேண்டுமா? துணிச்சல் மிகுந்த, நம்பத் தகுந்த, நேர்மையான, நியாயமான, பாகுபாடற்ற, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய, வாக்குறுதிகளைச் செய்து முடிக்கக்கூடிய வேட்பாளர்கள் தேசிய முன்னணிக்கு வேண்டும். அது எதிர்க்கட்சிகளுக்கும் அவசியமே.
மலேசிய வாக்காளர்கள் விஷய ஞானம் கொண்டவர்களாகவும் நாட்டு நடப்பை அறிந்தவர்களாகவும் நேர்மையான அரசியல்வாதிகள் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் நேர்மையானவர்களுக்கும் மக்களுக்காகத் தியாகம் செய்யவும், இனம், சமயம் பார்க்காமல் சேவை செய்யத் தயாராக இருக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பர்.
மக்களைக் கைத்தூக்கி விட்டு அவர்களின் திறைமைக்குத் தீனி போட்டு அனைவரும் உயருவோம் என்ற நன்னோக்கம் கொண்ட வேட்பாளர்களே வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள். அவர்களே அனைவராலும் விடும்பக்கூடிய வேட்பாளர்கள். இம்மாதிரியான வேட்பாளர்கள் இருக்கும் போது பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குப் போடும் நிலையும் வருமா?


