லண்டன், ஆக.4 –
மென்செஸ்டர் சிட்டியின் இளம் ஆட்டக்காரர் கேலேச்சி ஹியானாச்சோவை , லெய்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. 20 வயதுடைய ஹியானாச்சோவை 2 கோடியே 50 லட்சம் ஈரோ டாலருக்கு லெய்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளதாக இங்கிலாந்தின் பிபிசி தெரிவித்துள்ளது.
ஹியானாச்சோவின் வருகை லெய்செஸ்டர் சிட்டிக்கு வலு சேர்க்கும் என அந்த அணியின் நிர்வாகி கிரேய்க் ஷேக்ஸ்பியர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புதிய பருவத்தை முன்னிட்டு லெய்செஸ்டர் சிட்டி நான்கு புதிய ஆட்டக்காரர்களை விலைக்கு வாங்கியுள்ளது.
ஸ்பெயினின் செவியாவில் இருந்து விசேந்தே இபோரா, கோல் காவலர் எல்டின் ஜாக்குபோவிச் , ஹல் சிட்டியில் இருந்து ஹாரி மகுவேயர் ஆகியோரை லெய்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. லெய்செஸ்டர் சிட்டி அணியில் ஹியானாச்சோ 8 ஆம் எண் கொண்ட ஜேர்சையை அணியவுள்ளார்.
இதற்கு முன்னர் ஹியானாச்சோ, மென்செஸ்டர் சிட்டியுடன் 2021 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.எனினும் கடந்த ஜனவரி மாதம் கப்ரியல் ஜீசஸ், மென்செஸ்டர் சிட்டியில் இணைந்தது முதல் ஹியானாச்சோவுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.


