கோலாலம்பூர், அக் 1
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி பெண்களும் செல்லலாம் என இந்தியாவின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மலேசிய ஐயப்ப சேவை சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்கள் சைவமாக இருந்து மாலை அணிவித்து ஐயப்ப சுவாமிக்கான வழிபாடுகளையும் பூஜைகளையும் செய்வர். ஆனால், பெண்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் தூய்மையாக இருந்து வழிபாடுகள் செய்ய முடியாத காரணத்தினால் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதனால்தான், 10 வயதிற்கு கீழ் உள்ள பெண்களும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் சபரிமலைக்கு வருவதற்கு அனுமதி இருந்தது என்று மலேசிய ஐயப்ப சேவை சங்கத்தின் தலைவர் யுவராஜா கூறினார்.
இவ்வாறு இருக்கையில் இந்தியாவின் உயர்நீதிமன்றம் பெண்கள் அனைவரும் சபரிமலைக்குப் போகலாம் என்று தீர்ப்பை வழங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை ஐயப்ப தேவஸ்தானம் மேல்முறையீடு செய்துள்ளதோடு பல நாடுகளும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மலேசியாவிலிருந்து அதிகமான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இங்குள்ள ஐயப்ப பக்தர்கள் சார்பாக மலேசிய ஐயப்ப சேவை சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பத்துகேவ்ஸ் ஐயப்ப தேவஸ்தானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜா குறிப்பிட்டார்.
ஐயப்ப சுவாமியை வழிபடுவதற்கு பெண்களை ஒதுக்கவில்லை. ஏராளமான பெண்கள் ஐயப்ப சுவாமியை வழிபட்டு வருகின்றனர். ஆனால், 41 நாட்கள் பெண்கள் தொடர்ச்சியாக சைவமாக இருந்து வழிபாடுகள் செய்ய முடியாது என்றும் ஏன் பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்ற உண்மையான காரணமும் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் சொன்னார்.


