கோலாலம்பூர், மே 19-கடந்த சனிக்கிழமை தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடக்கவிருந்த அமைதியான புத்தகம் வாசிக்கும் மற்றும் விவாத ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் மாநகர் அமலாக்கத் தரப்பினர் இடைமறித்து, அந்த நிகழ்ச்சியை தடை செய்துள்ளது அநாகரிகம் என பிரபல மக்கள் சேவை வழக்கறிஞர் பி. ராஜசூரியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கு உல்லாச நிகழ்ச்சிகளையும் இன்னபிற நிகழ்ச்சிகளையும் எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி நடத்தும் போது, சாதாரண வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
அங்கு நடத்தப்படும் அமைதியான சாதாரண நிகழ்ச்சிகளுக்கும் மாநகர் மேயரின் முன் அனுமதியைப் பெற வேண்டுமென்ற கட்டுப்பாடு சர்வாதிகார நாடுகளில் மட்டுமே இருக்கும் நடைமுறை என்றும் ஜனநாயக நாட்டில் அது வெறுப்பையே ஏற்படுத்தும் என்றும் ராஜசூரியன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இம்மாதிரியான கட்டுப்பாடுகள் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என்றும் அவர் சாடினார்.


