கோலாலம்பூர், மே 18-பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக இணைய பாதுகாப்பு மீதான இலவச பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படவிருக்கும் இப்பயிற்சி பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்லஸ் சந்தியாகோ நம்பிக்கை தெரிவித்தார் .
“இது முற்றிலும் இலவச பயிற்சி. எனினும், 1,000 வெள்ளி முன் பணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடித்த பின்னர் இப்பணம் திருப்பி செலுத்தப்படும் “ என்று நேற்று இங்குள்ள சிலாங்கூர் ரோயல் கிளப்பில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 96 ஆவது ஆண்டு கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார் .
வரும் ஜூலை மாதவாக்கில் இப்பயிற்சி தொடங்கப்படும். இந்திய இளைஞர்கள் இணைய யுகத்திற்குத் தங்களைத் தயார்படுத்துவதற்கு இப்பயிற்சி துணை புரியும் என்றார்.
இந்திய இளைஞர்கள் பசுமை தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பம் வழி சிறந்த எதிர்காலத்தைப் பெறலாம்.
ஆனால், அரசாங்கம் அல்லது தனியார் துறையிடமிருந்து இவர்களுக்குப் போதுமான ஆதரவோ, வழிகாட்டியோ இல்லை என்றார்.
முன்னதாக தமது உரையில் இந்திய வர்த்தகர்கள் அதிக லாபத்தைப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று சார்லஸ் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில், இவர்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்த சமூக, பொருளாதார ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


