கிள்ளான், மே 25-அண்மைய காலமாக உலகில் மனிதாபிமானம் அறவே இன்றி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் வாழ அல்லல்படும் நிலைமை அதிகரித்து உலகை ஆட்டிப்படைத்து வருவதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன காஸாவில் 50,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்து, ஆயிரக் கணக்கானோர் அகதிகளாக வாழ நேர்ந்துள்ளது கொடுமையிலும் கொடுமையான பரிதாபம் என அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் கொடுங்கோள் அரசு நாட்டு மக்களைக் கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளி அராஜகம் புரிந்து வருவது மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தக் கொடுங்கோண்மைகளை உலக நாடுகள், ஐநா அமைப்பு, அமெரிக்க அரசாங்கம் போன்றவை கண்டும் காணாமலும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தவறியுள்ளன.
எனவே, இந்த அமைப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உலக மக்கள் ஒன்றிணைந்து, சாலைகளில் ஒன்று கூடி தங்களது ஆட்சேபத்தைப் போராட்டங்களின் வழி தெரிவிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.


