Homeஅரசியல்பிரதமரின் கேலிச்சித்திரம் எரிப்பு; மாணவர்களின் போராட்டத்தை முதிர்ச்சியுடன் பார்க்க வேண்டும்! -DHPP

பிரதமரின் கேலிச்சித்திரம் எரிப்பு; மாணவர்களின் போராட்டத்தை முதிர்ச்சியுடன் பார்க்க வேண்டும்! -DHPP

கோத்தா கினபாலு, ஜூன் 25-

சபா மலேசிய பல்கலைக்கழக (UMS) மாணவர்கள் சமீபத்தில் நடத்திய “கெம்பூர் ரசுவா சபா 2.0” என்ற அமைதிப் போராட்டம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தில், மாணவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கேலிச்சித்திரத்தை எரித்து, சபாவில் ஊழலை ஒழிக்கத் தவறிய அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்நடவடிக்கை, பல்வேறு விதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சிலர், மாணவர்களின் இந்தச் செயலை ஆதரித்தாலும், மற்றவர்கள், குறிப்பாக அரசியல் தலைவர்கள், இவர்களை “முட்டாள்கள்”, “கோழைகள்” என விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தை முதிர்ச்சியான மற்றும் புரிந்துணர்வு நோக்கில் பார்க்க வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவை – DHPP-யின் தலைவர் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் வலியுறுத்தினார்.

மாணவர் குரல்: நாட்டின் இதயத் துடிப்பு

மாணவர்கள், இளைஞர்களின் உயர்ந்த இலட்சியங்களின் பிரதிபலிப்பாக உள்ளனர். அவர்கள், நாட்டின் அறிவுசார் சொத்து மட்டுமல்ல, நீதி மற்றும் ஒருமைப்பாட்டிற்காக போராடும் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும் உள்ளனர்.

இந்தப் போராட்டம் தனிப்பட்ட வெறுப்பால் தூண்டப்பட்டதல்ல, மாறாக, சபாவில் நிலவும் ஊழல் பிரச்சினைகளுக்கு எதிரான பெரும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகும்.

நாட்டின் வரலாற்றைத் திருப்பி பார்க்கும்போது, பல முக்கிய தலைவர்கள் இளமையில் இதேபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நடப்பு பிரதமர் கூட, இளமையில் துங்கு அப்துல் ரஹ்மானின் புத்தகத்தை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர். எனவே, இன்றைய இளைஞர்களின் இதேபோன்ற செயல்களை எளிதில் கண்டிக்க முடியாது.

சட்டத்தை மதிக்க வேண்டும். ஆனால் குரலை அடக்காதீர்

மலேசியக் குடிமக்களாக, சட்டத்தையும் சமூக நாகரிகத்தையும் மதிக்க வேண்டும். ஆனால், இந்தப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது, எந்தவித தூண்டுதலோ அல்லது உடல் ரீதியான தொந்தரவுகளோ இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களை கைது செய்தது அதிகப்படியான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

இது, பொது அமலாக்க நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும். மாறாக, அரசாங்கம் மாணவர்களின் குரலைக் கேட்டு, மதிப்பீடு செய்து, தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

விமர்சனம் என்பது தேசத்துரோகம் அல்ல!

விமர்சனத்திற்கும் அவமதிப்பிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. இன்றைய மக்கள் பயமுறுத்தலால் அடக்கப்பட மாட்டார்கள். அவர்கள், செயல்களை எதிர்பார்க்கிறார்கள், வெறும் கவர்ச்சிகரமான முழக்கங்களை அல்ல. அவர்கள் நீதி நிலைநாட்டப்படுவதை காண விரும்புகிறார்கள், அரசியல் அலங்காரங்களை அல்ல.

தேசியத் தலைவர்களின் படங்களை எரிப்பது மலேசியாவில் அரசியல் பண்பாடாக மாற வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், தெளிவான மற்றும் கொள்கை அடிப்படையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாணவர்களின் குரலை அடக்குவதையே நான் எதிர்க்கின்றேன்.

யுஎம்எஸ் மாணவர்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர்: சபாவின் குரல் இனி அடக்கப்பட முடியாது. ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடாக, பேச்சு மற்றும் உரையாடலால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தாம் அரசாங்கத்தை வமியுறுத்துவதாக, பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் கூறினார்.

 

spot_img

latest articles

explore more