Homeமலேசியாபுத்ரா ஹைட்ஸ் தீ விபத்து - தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்! -பாலசுப்ரமணியம் கோரிக்கை

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து – தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும்! -பாலசுப்ரமணியம் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 1-

சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, எரிவாயு குழாய் வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்து, நாட்டிலுள்ள எரிவாயு குழாய் அமைப்பு முறையின் பாதுகாப்புத்தன்மை குறித்து கேள்வியை எழுப்புவதாக, பாஸ் ஆதரவுப் பேரவையின் தலைவர் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

100க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளான அத்துயரச் சம்பவம், புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக நாடு முழுவதும், எரிவாயு குழாய் அமைப்பு முறை உள்ள பகுதிகளில், குறிப்பாக, மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலும், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ளவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் (PGB) நிறுவனம், அவர்களது கண்காணிப்பு அமைப்பு SCADA, ட்ரோன்கள் மற்றும் ஒலி கண்டறிதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை 24 மணி நேரமும் பயன்படுத்தி குழாய்களைக் கண்காணிப்பதாக கூறியுள்ளது.

ஆனாலும், புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து, எதிர்பாராத நேரத்தில் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் நடப்பிலுள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் புலப்படுத்தியுள்ளது.

புத்ரா ஹைட்ஸில், எரிவாயு குழாய் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருந்துள்ளது. ஆனால், குழாயின் கீழே உள்ள மண் பலவீனமாகவும் ஈரமான நிலையிலும் இருந்துள்ளதால், அது அதிக அழுத்தம் கொண்ட குழாயை தாங்கிப்பிடிக்கும் நிலையில் இல்லை.

எனவே, தொடர் நகர்வுகள் காரணமாக குழாயின் மீது அழுத்தமும் உராய்வும் ஏற்பட்டு, இறுதியில் அது வெடிப்புக்கு வழிவகுத்ததாக, மலேசிய பணிசார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் (DOSH) சமீபத்திய அறிக்கை கூறுகின்றது.

ஆகவே, புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, தேசிய அளவில் விரிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாலசுப்ரமணியம் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள எரிவாய் குழாய் அமைப்பு முறைகள் உடனடியாக பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய ஆபத்து குறித்த வரைபடமாக வெளியிடப்பட வேண்டும்.

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் சுயேட்சை பணிக்குழு அமைப்பும், மாற்று விநியோக வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் வரவேற்புக்குரியது.

இருப்பினும், நீண்டகால அடிப்படையிலான தடுப்பு அணுகுமுறை மிக முக்கியமானது என்றும், விபத்து நிகழ்ந்த பின்னர் மட்டும் நடவடிக்கை எடுப்பது போதாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக, பின்வரும் ஐந்து உடனடி நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார்:

1. மலேசியாவில் செயல்பாட்டில் உள்ள அனைத்து எரிவாயு குழாய்களையும், குறிப்பாக மக்கள் நெருக்கமான பகுதிகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அருகிலுள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

2. எரிவாயு குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு இடையக மண்டலங்களை அமல்படுத்துதல், எச்சரிக்கை பலகைகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை தெளிவாகவும் ஒரே மாதிரியாகவும் பொருத்துதல்.

3. உள்ளூர் மக்களை உள்ளடக்கிய அவசரகால பயிற்சிகளை தவறாமல் நடத்தி, கசிவு அல்லது வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக செயல்படத் தயாராக வைத்திருத்தல்.

4. எரிவாயு குழாய்களின் இருப்பிடத் தரவுகளை மிகவும் வெளிப்படையாக வழங்குதல், இதனால் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு திட்டமிடல்களை பொறுப்புடன் மேற்கொள்ள முடியும்.

5. ஆபத்து மதிப்பீடு மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பு கண்காணிப்பில் சிவில் சமூக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஈடுபடுத்துவதை ஊக்குவித்தல்.

அடுத்த துயரம் ஏற்படும் வரையில் காத்திருக்காமல், தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more