கோலாலம்பூர், ஜூலை 22
அரசியல் சட்டத்திற்கு ஏற்ப இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி என்ற தலைப்பில் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திக்கும் தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என கிம்மாவின் தேசியத் தலைவரான செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் நான் வழங்கவில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் என் தலைமையிலான கிம்மா கட்சி பல ஆண்டுகளாக கோரிக்கைகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றது.
குறிப்பாக, மேலவையில் இது குறித்து பலமுறை நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நான் அதற்கு எதிராக கருத்து வெளியிடுவேனா? தமிழ் நாளேடுகளில் நான் கூறியதாக வெளிவந்த செய்தியை நான் முற்றிலும் மறுக்கின்றேன்.
இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் கிம்மா கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.


