கோலாலம்பூர், ஜூலை 24-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை எதிர்கொள்ள மலேசிய சோசலிச கட்சி (பி.எஸ்.எம்) தயாராக இருப்பதாக அதன் மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணியில் முன்னா
ள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இணைந்ததால் அதிருப்தியுற்ற 1998இல் தொடக்கப்பட்ட சீரமைப்பு இயக்கத்தின் செயலாளரான அப்துல் ரசாக் இஸ்மாயில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பில் போட்டியிட முன்வந்துள்ளது தொடர்பில் வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நம்பிக்கை கூட்டணியை எதிர்ப்பது எங்கள் இலக்கு அல்ல. மாறாக, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதே எங்களின் இலக்கு. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கூட்டணி எங்களுக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கவில்லை. அவ்வாறு செய்வதில் அக்கூட்டணிக்கு ஆர்வமில்லை என நினைக்கின்றேன்.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் வெளியில் கூறி வருகின்றனர். ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தைகள் இதுவரையில் நடைபெறவில்லை. பேச்சுவார்த்தைக்குக்கூட அவர்கள் எங்களின் தலைவர்களை அழைக்கவில்லை என மலேசியாகினியிடம் அருட்செல்வம் குறிப்பிட்டார்.
நம்பிக்கை கூட்டணியில் பி.எஸ்.எம். மற்றும் பாஸ் ஆகிய கட்சிகள் இணையாததால் வருகின்ற பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியில் நான்கு முனை அல்லது அதற்கும் மேல் கட்சிகள் போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளது. அப்துல் ரசாக்கின் கோரிக்கை குறித்து வினவப்பட்ட போது, பி.எஸ்.எம். கட்சிகளின் 4 அடிப்படை நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டதால் அக்கட்சியின் கீழ் அப்துல் ரசாக் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அருட்செல்வம் கூறினார்.
சொத்து விவரங்களை அறிவித்தல், இனவாத அரசியலில் ஈடுபட கூடாது, போட்டியிடும் தொகுதியில் சேவை மையத்தை திறத்தல், பி.எஸ்.எம். கட்சியின் பொதுத்தேர்தலுக்கான கொள்கை அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தல் ஆகியவைகளே அந்த 4 நிபந்தனைகளாகும்.
அப்துல் ரசாக் ஷா அலாமிலுள்ள ஸ்ரீ மூடாவில் போட்டியிடுவார் என நான் நம்புகின்றேன். 4 நிபந்தனைகள் அடிப்படையில் 2 மாதங்களுக்கு முன்னரே நாங்கள் ஒப்புதல் அளித்து விட்டோம் என அருட்செல்வம் குறிப்பிட்டார்.


