போர்ட்டிக்சன், ஜுலை 24-
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு அத்தொகுதியில் வெற்றி பெறக்கூடிய அம்னோ வேட்பாளரைத் நிறுத்துவதற்கு அத்தொகுதியை அம்னோ கோரும் என தெலுக்கெமாங் தொகுதி அம்னோ தலைவர் டான்ஸ்ரீ முகமது ஈசா அப்துல் சமாட் இங்கு நடந்த ஒரு ஹாரிராயா நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக செய்தி வந்திருந்தது.
இதற்கிடையில் அச்செய்தியுடன் மஇகாவிற்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வேறு ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுத்தால் தெலுக்கெமாங் தொகுதியை விட்டுக் கொடுக்க தயாரென மஇகா தெலுக்கெமாங் தொகுதித் தலைவர் டத்தோ ஆர். பாலகிருஷ்ணன் கூறியதாகவும் தெரிகிறது.
இச்செய்தி நெகிரி மாநில மஇகா கிளைத் தலைவர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டத்தோ ஆர். பாலகிருஷ்ணன் அப்படி ஒரு செய்தியை டான்ஸ்ரீ முகமது ஈசாவும் தாமும் பத்திரிக்கையாளரிடம் தெரிவிக்கவில்லை என்றார். மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான இத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு நாளும் டத்தோ வி.எஸ். மோகனுடன் சேர்ந்து மக்களைச் சந்தித்து வருவதாகவும் தாம் இத்தொகுதியை விட்டுக் கொடுக்க தயாரெனக் கூற வில்லை
என்கிறார்.
தெலுக்கெமாங் நாடாளுமன்றத் தொகுதி இந்நாட்டில் முதலாவது தேர்தல் வந்த போது போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது. .அத்தொகுதியில் முதலாவதாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டத்தோ மகிமா சிங். அவர் இரண்டு தவணை இத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதன் பிறகு 1959 ஆம் ஆண்டு டத்தோ மகிமா சிங், ஜசெக கட்சியில் போட்டியிட்ட டாக்டர் சூரியனிடம் தோல்வி கண்டார். அதன் பிறகு டத்தோ கே.பத்மநாபன் அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். தொடர்ந்து மஇகா தொகுதியான இங்கு பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் டி மாரிமுத்து, டத்தோ டாக்டர் எல். கிருஷ்ணன், திரு அன்பழகன், டத்தோ எஸ். சோதிநாதன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்.
12 ஆவது பொதுத் தேர்தலில் டத்தோ எஸ். சோதிநாதன் பிகேஆர் வேட்பாளர் டத்தோ கமருள் பஹாரின் அபாஷிடம் தோல்வி கண்டார். 13ஆவது பொதுத் தேர்தலில் டத்தோ வி.எஸ். மோகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோ கமருள் பஹாரி அபாஷிடம் தோல்வி கண்டார்.


