தூத்துக்குடி, ஜூலை 28-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்தில் அப்துல்கலாமிற்கு மணிமண்டபம் அமைத்து உள்ளார். ஒரு தலைசிறந்த மரியாதை அப்துல்கலாமிற்கு வழங்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணுமின் உலை பாதுகாப்பானது என்று அவர் தெரிவித்தார். இருந்தபோதும் தமிழகம் வளர்ச்சி அடைய கூடாது என்று நினைத்த அந்நிய சக்திகள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தின. இதுபோன்ற தேச துரோக, பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகளை கதிராமங்கலத்தில் இருந்தும், நெடுவாசலில் இருந்தும் வெளியேற்ற வேண்டும்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கல்வி தரம் தாழ்ந்து இருக்கிறது. இதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் பின்பற்றி வரும் கல்வி கொள்கை. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம்.
ஆகஸ்டு 9-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் வர்த்தக சங்கங்களுடன் இணைந்து சீன பொருட்களை எதிர்த்தும் இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்புகளை முறியடித்து கொண்டிருக்கிற இந்திய ராணுவத்தை ஆதரித்தும், போராட்டம் நடத்த உள்ளோம். தூத்துக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அன்று மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


