தர்மபுரி, ஜூலை 28-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காவிரி பாதுகாப்பு பிரசாரத்தை தொடங்க போவதாக அறிவித்து இருந்தார். நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் வந்து தங்கினார்.
அவர் இன்று காலை 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிலிகுண்டுலு சென்றார். அங்கு கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆறு நுழையும் பகுதியை பார்வையிட்டார். பின்னர் மத்திய நீர்வள அதிகாரிகள் நீர் அளவு குறித்து கணக்கெடுப்பது குறித்து கேட்டறிந்தார்.
அதன்பிறகு ஒகேனக்கல் வந்தார். அங்கு காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கினார். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சின்னாறு செல்கிறார். அங்கும் பிரசாரம் செய்துவிட்டு காரில் ஏரியூர் செல்கிறார். பின்னர் பண்ணவாடி, மேட்டூர் வழியாக ஈரோடு செல்கிறார். ஈரோட்டில் இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை காலை கொடுமுடி, வேலாயுதம்பாளையம், வேலூர், கரூர், முசிறி வழியாக திருச்சி செல்கிறார். நாளை இரவு திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை மறுநாள் காலை திருவையாறு, கும்பகோணம், கதிராமங்கலம், குத்தாலம், மயிலாடுதுறை வழியாக பூம்புகார் செல்கிறார். பூம்புகாரில் ஞாயிற்றுகிழமை இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பிரசார பயணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விளக்கியும் பேசுகிறார்.
இன்று காலை ஒகேனக்கல்லில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கிய பிரசார பயணத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.


