கோலாலம்பூர், மார்ச்.7 –
கோலாலம்பூர், சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடை வரும் ஞாயிற்றுக்கிழமை வரைத் தொடரும் என சிலாங்கூர் மாநில குடிநீர் விநியோக நிறுவனமான ஷாபாஸ் அறிவித்துள்ளது.
சுங்கை சிலாங்கூரின் மூன்றாவது கட்டத்தில் உள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுப் பார்ப்பு பணிகள் தொடர்வதால் குடிநீர் விநியோகத்தில் தொடர்ந்து தடை ஏற்படும் என ஷாபாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மணி ஆறு தொடங்கி மாலை ஆறு மணிக்குள் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் வழக்க நிலைக்கு திரும்பும் என ஷாபாஸ் அறிவித்திருக்கிறது.
இந்த காலக் கட்டத்தில் ஒன்பது இடங்களுக்கு லாரிகளின் மூலம் 24 மணி நேரம் குடிநீர் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலா லாங்காட், உலு சிலாங்கூர் பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை ஆறு மணி அளவில் குடிநீர் சேவை வழக்கத்திற்கு திரும்பும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கோலாலம்பூர், கோம்பாக், கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் போன்ற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி குடிநீர் சேவை வழக்க நிலைக்கு திரும்பும் என கூறப்பட்டுள்ளது. குழாய் பழுதுப் பார்ப்பு பணிகள் செவ்வாய்கிழமை நிறைவுப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பழுதுப் பார்ப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதாக ஷாபாஸ் தெரிவித்துள்ளது.


