உலு சிலாங்கூர், மார்ச்.7 –
சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் பாக்காத்தான் அரசாங்கத்தின் மிகப் பெரிய ஐந்து பலவீனங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் இன்று சுட்டி காட்டினார். குடிநீர் பிரச்சினை, வீடுகளின் விலையேற்றம் , மக்களுக்கு சுமை அளிக்கும் வரிகள், குப்பைகளை நிர்வகிப்பதில் பலவீனம், ஆறுகளை முறையாக நிர்வகிக்க தவறியதால் பல்வேறு சுகாதார பிரச்சினை எதிர்நோக்குதல் போன்றவையே அந்த ஐந்து பலவீனங்களாகும் என பிரதமர் கூறினார்.
கிளந்தானில் எதிர்கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசாங்கம் , அம்மாநிலத்தில் குடிநீர் சேவையை சிறந்த முறையில் நிர்வகிக்கிறது. ஆனால் சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொள்ளாத பாக்காத்தான் அரசாங்கம் அனைத்திலும் அரசியல் செய்வதாக நஜிப் குற்றஞ்சாட்டினார்.
சிலாங்கூர், உலு யாமில் புதன்கிழமை சிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்ற இலக்கு கொண்டுள்ளது. எனவே சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பலவீனங்களை மக்களிடம் விளக்கும் பணிகளை சிலாங்கூர் தேசிய முன்னணி தேர்தல் கேந்திரம் துடிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்க முடியும் என பிரதமர் உறுதி அளித்தார். கோலாலம்பூர் , சிலாங்கூரை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரே அரசாங்கத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற வேண்டும் என நஜிப் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் மேற்கொள்ளப்படும் துரித கடவு ரயில் திட்டம், கிழக்குக்கரை ரயில் திட்டம், இலகு ரயில் திட்டங்கள் அனைத்தும் சிலாங்கூர் மாநிலத்தையும் உட்படுத்தி இருப்பதால் தேசிய முன்னணி இவ்விரண்டு பிரதேசங்களிலும் ஆட்சி செலுத்துவது சிறப்பாக இருக்கும் என நஜிப் கூறினார்.


