கோலாலம்பூர், மார்ச். 8 –
ஆஸ்திரேலிய வங்கியில் 9 லட்சத்தும் 20 ஆயிரம் ரிங்கிட் வைத்திருந்ததாக கூறப்படும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜுமுடின் முஹமட், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்லத் தேவையில்லை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வங்கியில் இருந்த நிதி குறித்து வான் அஹ்மாட் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முஹமட் புசி ஹரூணிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்பாக வான் அஹ்மாட் மீது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. புசி ஹரூணிடம் அதற்கான ஆதரங்களையும் வான் அஹ்மாட் சமர்பித்துள்ளார் என துணைப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட எந்த ஒரு தரப்பும் விசாரணை மேற்கொள்வதை தடுக்க இயலாது. அதேவேளையில் வான் அஹ்மாட் விடுமுறையில் செல்ல வேண்டியதும் அவசியமில்லை என அவர் சொன்னார்.
இது குறித்து ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்த புசி ஹாருன், வான் அஹ்மாட், சிலாங்கூர், ஷா ஆலமிலுள்ள தனது வீட்டை விற்றதன் மூலம் பெற்ற 700,000 ரிங்கிட்டை (260,770 ஆஸ்திரேலிய டாலர்கள்) ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வங்கிக் கணக்கில் முதலீடு செய்ததாக தெரிவித்திருந்தார்.


