கோலாலம்பூர், மார்ச் 8-
இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து பிரிமியர் லீக்கில் களம் கண்டுள்ள மிஃபா அணிக்கு எப்.எம்.எல்.எல்.பி 5 லட்சம் வெள்ளி அபராதம் விதித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக மிஃபாவின் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம், போதைப்பொருள் எடுக்க மாட்டோம் என மிஃபா பிரிமியர் லீக், பிரசிடெண்ட் கிண்ண விளையாட்டாளர்கள், நிர்வாகக்குழுவினர் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் காலதாமதாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதன் தொடர்பில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மிஃபாவை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இந்தத்தொகை மிகப்பெரியது. காற்பந்துத்துறையில் நாட்டிற்காகவும், சமுதாயத்தை பிரதிநிதித்தும் விளையாட்டாளர்களை உற்பத்தி செய்து வருகிறது என்றார் அவர். அத்தகைய சூழலில் 5 லட்சம் வெள்ளி அபராதம் என்பது சரியான நடவடிக்கை அல்ல. மேலும் மேல்முறையீட்டிற்கு சரியான தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
இந்த உறுதி மொழி நிகழ்ச்சியில் மஇகாவின் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மஇகாவின் துணைத்தலைவரும், பிரதமர் துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே தேவமணி, இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான செனட்டர் டத்தோ டி.மோகன், மிஃபா அணியின் மேலாளர் துவான் ஏ.எஸ்.பி.ராஜன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆய்வு மற்று ஆலோசனை உதவி ஆணையர் கருணாநிதி, எப்.எம்.எல்.எல்.பி நிர்வாக செயலாளர் கெவின் ராமலிங்கம், மிஃபாவின் செயலாளர் அன்பா, மற்றும் மிஃபா குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



