பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30-
எதிர்க்கட்சிக் கூட்டணியில் துன் மகாதீரின் ஈடுபாட்டை சந்தேகக் கண் கொண்டு பார்ப்போர் அதனை விட்டொழிக்க வேண்டுமென டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார். தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அன்வார், மகாதீரின் அவைத் தலைவர் பதவி எவ்விதத்திலும் கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையிலிருந்து மாற்ற முடியாது என்றும் கூட்டணியில் உறுப்புக் கட்சிகளின் ஒருமித்த முடிவினால் மட்டுமே அது சாத்தியம் என அவர் குறிப்பிட்டார்.
கொள்கைகளில் மாற்றம் எதுவும் ஏற்பட்டால், அது பொது மக்களிடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உறுப்பினர்களின் சந்தேகங்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அவர்களின் சந்தேகங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சி சார்பு அமைப்புகளான சுவாராம், ஒத்தாய் ரிஃபோர்மாசி அமைப்பு, மலேசிய சோசலிஸ கட்சி மற்றும் சில அரசு சாரா இயக்கங்கள் டாக்டர் மகாதீர் பக்காத்தான் கூட்டணியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதற்கு எதிராக, அன்வார் மேற்கண்ட விளக்கத்தை நேற்று வெளியிட்டிருந்தார்.
கூட்டணியில் பெர்சத்து கட்சியையும் டாக்டர் மகாதீரையும் இணைத்துக் கொண்டது கூட்டணியின் பால் மக்களின் ஆதரவைப் பெருக்கவே என்றும் தனிப்பட்ட முறையில் தாம் மகாதீரை கூட்டணியில் வரவேற்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனை முன்னிட்டே தமது துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது மகாதீர் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வழக்கத்துக்கு மாறாகவும் செயல்படுவது கூட்டணியின் வலுவை அதிகரிக்கவே என்றும் அவருக்குப் போதுமான கால அவகாசத்தை அளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதே வேளையில், அரசு சாரா இயக்கங்கள் பக்காத்தான் கூட்டணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து சாதக பாதகங்களைத் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். அவர்களின் ஒத்துழைப்பின் மூலம் 14ஆவது பொதுத் தேர்தலில் மாற்றம் வரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


