பெக்கான், மார்ச்.31 –
14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உறுப்பினர்கள் தேசிய முன்னணியின் வெற்றி பெற செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டு கொண்டார். அம்னோ கட்சித் தேர்தல் தொடர்பான சிந்தனையை ஒதுக்கி விட்டு தேசிய முன்னணியின் வெற்றி குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
மத்தியில் ஆளும் அதிகாரத்தை முடிவு செய்யும் தேர்தலாக 14 ஆவது பொதுத் தேர்தல் விளங்கும் வகையில் அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் சொன்னார். பெக்கான் தேசிய முன்னணி தேர்தல் கேந்திரத்தை தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் அதிகாரத்தை இழக்கும் பட்சத்தில் அம்னோ தேர்தல் குறித்து சிந்தித்து எந்த ஒரு பயனும் இல்லை என அவர் கூறினார். நாட்டின் முன்னேற்றத்துக்காக நாம் வகுத்துள்ள திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்றால் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என நஜிப் நினைவுறுத்தினார்.
அரசியல் தலைவர்கள் வரலாம், போகலாம். ஆனால் அரசியல் கட்சி என்பது பாரம்பரியமாக நம்மிடம் வழங்கப்பட்டது.எனவே கட்சி என்பது நீடித்த ஒன்று. அந்த கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.நாம் வாழும் இந்த நாட்டை எந்த ஒரு தரப்பினரும் சிறுமைப்படுத்தினாலும் நாம் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டும் என அவர் சொன்னார்.


