லண்டன், ஏப்.2 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 1 – 3 என்ற கோல்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரிடம் தோல்வி கண்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் செல்சியைத் தோற்கடித்துள்ளது.

மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 30 ஆவது நிமிடத்தில் அல்வாரோ மொராத்தா முதல் கோலை அடித்து செல்சியை முன்னணியில் வைத்தார்.எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் கிறிஸ்டியன் எரிக்சன் போட்ட அற்புதமான கோலின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ஆட்டத்தை சமப்படுத்தியது.

முன்னணி தாக்குதல் நட்சத்திரம் ஹாரி கேன் இல்லாமல் களமிறங்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் அதிரடி தாக்குதல்களைத் தொடுத்தது. நான்கு நிமிட இடைவெளியில் டெலி அலி போட்ட இரண்டு கோல்களின் வழி டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 64 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.அதேவேளையில் செல்சி 56 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.



