Homeகலை உலகம்மலேசியாவில் விவேகம் படத்தை நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகின்றது!

மலேசியாவில் விவேகம் படத்தை நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகின்றது!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7-
சத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் தல அஜித்குமாரின் விவேகம் திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி உலகமெங்கிலும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது.
இப்படத்தில் தலயுடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசான் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்களும் நடித்துள்ளனர்.

மலேசியாவில் இப்படத்தை வெளியிடும் உரிமையை நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை நாடு தழுவிய திரையரங்குகளில் விநியோகிக்கும் பொறுப்பை உள்ளூர் தயாரிப்பு நிறுவனமான எம்.எஸ்.கே. பிலிம் புரோடக்க்ஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. மலேசியாவில் விவேகம் திரைப்படத்தை வெளியிடுவது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஜைனுல் அலாம் அப்துல் காடீர் கூறுகையில், தனது நிறுவனம் 2015ஆம் ஆண்டில் ஒரு மலாய் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து விவேகம் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றிருப்பதாகவும் கூறினார். 

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்கான புரமோஷன் பணிகளை இதன் பிறகு மிக தீவிரமாக மேற்கொள்வோம். இப்படத்தின் முதல் காட்சி உள்பட வெளியீடு குறித்த தகவல்கள் எங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் எம்.எஸ்.கே. நிறுவனத்தின் பக்கத்திலும் அவ்வப்போது வெளியிடப்படும்.

இப்படத்தில் மலேசிய ஹிப் ஹாப் புகழ் யோகி பி பாடியிருப்பதாலும் நம் நாட்டிற்கு ஏற்ற திரைப்படமாக இது அமைந்திருப்பதாலும் இதனை வெளியிடுகிறோம். ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி மிகப் பெரிய அளவில் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதேவேளையில், விவேகத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசான் ஆகியோரை படத்தின் புரமோஷனுக்காக அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முதல் முறையாக ஒரு தமிழ்ப்படத்தை வெளியிடுகிறோம். நிச்சயமாக இப்படம் நல்லதொரு வரவேற்பை பெறும் என ஜைனுல் அலாம் அப்துல் காடீர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.கே. நிறுவனத்தின் இயக்குநர் சாரதா கூறுகையில், முதல்முறையாக தமிழ்த்திரைப்படத்தை வெளியிடவிருக்கும் நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு உதவுவதில் பெருமையடைவதாக கூறினார்.

ஒரு திரைப்படம் வெளியாகும் போது நாட்டில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள திரையரங்குகளில் அடிக்கடி கார் நிறுத்துமிட பிரச்னை முதலானவை எழுகின்றது. இம்முறை அதனை குறைக்கும் வகையில் பிரபல வாடகைக் கார் நிறுவனமான ஈவோம் உடன் கைகோர்த்துள்ளோம். அந்த நிறுவனத்தின் செயலியை கைத்தொலைப்பேசிகளில் ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து ஒரு மாதத்திற்கான பற்றுசீட்டை பெறலாம். அதாவது, அவர்கள் விரும்பும் திரையரங்குகளுக்கு சென்று விவேகம் திரைப்படத்தை காணுவதற்கு ஈவோம் போக்குவரத்து சேவையை இலவசமாக அவர்கள் பெறலாம் என சாரதா குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ டாக்டர் ஸ்டீவன், டேவிட் ராஜா, டி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் கவிமாறன், மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், மலேசிய தல அஜித் ரசிகர் மன்றம், இசைப்புயல் ஏர்.ரகுமான் ரசிகர் மன்றம் முதலானவற்றிலிருந்து அதன் தலைவர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

spot_img

latest articles

explore more