கோலாலம்பூர், ஆக. 7-
இளைஞர்களை சுண்டி இழுத்த மோஜோ எம்.ஐ.எல்.எப்.எப். தனிநபர் இசை நிகழ்ச்சி இந்த ஆண்டும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி கே.டபள்யூ.சி. பேஷன் மால் ஸ்டார் எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றார்கள்.
குறிப்பாக பிரபல பின்னணிப் பாடகர் விஜய் பிரகாஷ் அவர் தம் குழுவினரோடு இதில் கலந்து கொள்ளும் வேளையில் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான சிட் ஸ்ரீராம் அவர்தம் குழுவினரோடு இதில் கலந்து கொள்கிறார். அதோடு ஹரிஸ் ஜெய்ராஜின் முன்னணிப் பாடகர் ஆலாப் ராஜூ, மசால காபி குழுவின் முன்னணிப் பாடகர் ஜெய் து, அகம் குழுவினரும் இதில் பங்கேற்கின்றார்கள்.
கடந்தாண்டு தாய் குடம் பிரிட்ஜ், மசாலா காபி, ஹரிச்சரண், கார்த்திக் ஆகியோர் பங்கெடுத்த மோஜோ எம்.ஐ.எல்.எப்.எப். தனிநபர் இசை நிகழ்ச்சி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை 2,400 பேர் கண்டு களித்தனர். கடந்தாண்டு மக்கள் வழங்கிய மகத்தான ஆதரவின் அடிப்படையில் இந்த முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி ரத்னகுமார் கூறினார். ஒவ்வொரு குழுவினரும் 45 நிமிடம் இசை நிகழ்ச்சியை வழங்குவார்கள்.
இதில் இரண்டு உள்ளூர் கலைஞர்களும் பங்கேற்கவிருக்கின்றார்கள். இணையத்தின் மூலம் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் ரசிகர்கள் உணவையும் பதிவு செய்துகொள்ளலாம். அதனை வழங்குவதற்கு ஊழியர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்தாண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் நேரம் கடந்துவிட்டதால் இந்த முறை சரியாக 5.30க்கு நிகழ்ச்சி தொடங்கி விடும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரும் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு முகநூல் Mojo Projects பக்கத்தை நாடலாம்.
