கோலாலம்பூர், ஆக. 7-

கட்டுமானப் பாதுகாப்பு துறையில் அந்நியர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால் இதனை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்.கே.ஆர்.எஸ். உரிமையாளரும், மலேசிய கட்டுமானப் பாதுகாப்பு சங்கத்தின் (மோசா) தலைவருமான டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார்.

சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் நாடு தழுவிய நிலையில் பல்வேறான நடவடிக்கைகளும் அதிரடி கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் பல அந்நிய தொழிலாளர்கள் வேலையை இழந்து சொந்த நாட்டிற்குச் செல்லும் நிலைமை எழுந்துள்ளது.

இந்நாட்டில் கட்டுமானத் துறை, கட்டுமானப் பாதுகாப்பு துறை ஆகியவற்றில் அந்நியர்களின் தேவைதான் அதிகமாக இருக்கின்றது. தற்போது பலர் இந்த தொழிலில் ஈடுபடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்திய இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு இத்துறையில் ஈடுபடவேண்டும் என்று டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார்.

கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் தொழில் திறன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். பலருக்கு இந்தக் கட்டுமான பாதுகாப்பு துறைகுறித்து தெரியவில்லை. இத்துறையில் மேம்பட 3 நிலைகள் இருக்கின்றது. ஆரம்பத்தில் இதில் இணையும் இளைஞர்கள் மாதத்திற்கு 1,500 வெள்ளியை ஊதியமாக பெற முடியும். பின்னாளில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டத்தை தொடும் போது அவர்களின் மாத வருமானம் 10,000 வெள்ளி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இதை அடைவதற்கு கடினமான உழைப்பு அவசியம். அதோடு இந்தத் துறையில் மேம்படவேண்டும் என்ற ஒரே எண்ணத்தை மனதில் விதைத்தால் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தை அவர்களால் அமைத்துக் கொள்ள முடியும். என்று டத்தோ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார். இத்துறை குறித்த விளக்கத்தை எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம். அதோடு இதில் எப்படி ஈடுபடுவது என்ற கேள்விக்கும் பதில் அளிக்க தாம் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே, அதிகமான இந்திய இளைஞர்கள் கட்டுமானத் துறையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களுக்கான மேம்பாட்டு தூர நோக்கு திட்டத்தையும் தாம் வரையறுத்திருப்பதாக அவர் கூறினார்.

குறிப்பாக ஒரு நபரிடமிருந்து மாதத்திற்கு 10 வெள்ளி வசூலிக்கப்படும். வருடத்திற்கு ஒருவர் 120 வெள்ளியை செலுத்துவார். இதில் அதிகமானவர்கள் பங்கேற்கும் பட்சத்தில் பெரும் தொகையை நம்மால் அடையாளம் காணமுடியும். அதனை மூலதனமாகக் கொண்டு கட்டுமானப் பாதுகாப்பு துறையில் இந்திய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்க தாம் முடிவு செய்திருப்பதாகவும் டத்தோ டாக்டர் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார். கட்டுமான பாதுகாப்பு குறித்த மேல் விவரங்களுக்கு 03−87364851 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.