கோலாலம்பூர், ஆக. 7-
ஸ்ரீ குருஜி அறவாரியம் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசிய இந்திய தூதரகம், மலேசிய கோப்பியோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து முதல்முறையாக அனைத்துலக பாரம்பரிய மருத்துவ மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு வருகின்ற 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

மக்களுக்கு பாரம்பரிய முறையில் உடல்நலத்தை பேணுவது குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிலிருந்து சுமார் 350க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக ஸ்ரீ குருஜி அறவாரியத்தின் தலைவர் ஸ்ரீ ராமாஜி தெரிவித்தார்.

பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள புரிதலை மக்களுக்கு தருதல், பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை அடையாளம் காணுதல், பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளை அடையாளம் காணுதல் முதலான நோக்கங்களின் அடிப்படையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தியாவில் பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆயூஷ் என்ற தனி அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சும் இந்த மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இம்மாநாட்டில் சிறப்பு பிரமுகர்களாக ம.இ.காவின் தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், மலேசியாவிற்கான இந்திய தூதர் திருமூர்த்தி, இந்திய ஆயுஷ் அமைச்சரவையின் பிரதிநிதிகள் முதலானோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ ராமாஜி குறிப்பிட்டார்.

இம்மாநாட்டின் ஏற்பாட்டு குழு செயலாளரான பார்த்திபன் கூறுகையில், இம்மாநாடு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அதாவது பாரம்பரிய மருத்துவ மாநாடு ஆங்கில மொழியிலும் சித்த மருத்துவ மாநாடு முற்றிலும் தமிழ்மொழியிலும் நடத்தப்படவுள்ளது. அதோடு, இம்மாநாட்டில் மலாய் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவத்தையும் இணைத்துள்ளோம் என கூறினார்.

நம் நாட்டில் மூன்று அரசாங்க மருத்துவமனைகளில் இந்திய பாரம்பரிய மருத்துவ சேவைக்கான தனி பிரிவுகள் உள்ளன. இப்போது இந்த மருத்துவத்தை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இத்துறையில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்திய தூதரகமும் மலேசிய மாணவர்கள் இந்திய பாரம்பரிய மருத்துவத்தை பயில 50 உபகார சம்பள வாய்ப்பை வழங்குகின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இத்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளவிருக்கும் மாணவர்களின் செலவுகளை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளையில், அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு 100 வெள்ளி கட்டணத்தை கழிவு விலையில் நிர்ணயித்துள்ளோம் என பார்த்திபன் கூறினார். மேல்விவரங்களுக்கு 0176834685 (பார்த்திபன்), 0172003530 (குமாரி மலர்), 0322744115 அல்லது www.tradalth.com அகப்பக்கத்தையும் tradalth2017@gmail.com மின்னஞ்சலை நாடலாம்.