கோலாலம்பூர், செப். 30-
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர், 2 மத்திய செயலவை உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் ஆசி பெற்ற அணி வென்றது.
இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக ஜோகூரின் சுப்ரமணியம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய செயலவை பதவிகளுக்கு புனிதன், தமிழ்வாணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சுப்ரமணியத்திற்கு 2,724 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஸுக்கு 1,303 வாக்குகள் கிடைத்தன. மத்திய செயலவைக்குப் போட்டியிட்ட புனிதனுக்கு 3,687 வாக்குகளும் தமிழ்வாணனுக்கு 2,845 வாக்குகளும் கிடைத்த வேளையில் நேருஜிக்கு 1,623 வாக்குகள் கிடைத்தாக கூறப்பட்டது.

இதனிடையே புத்ரி பிரிவின் தலைவியாக பொன் கோகிலம் தேர்தெடுக்கப்பட்ட வேளையில் துணைத் தலைவியாக ஹேமலதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொன் கோகிலத்திற்கு 1,940 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பராசக்திக்கு 735 வாக்குகள் கிடைத்ததாகவும் துணைத் தலைவி பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதாவிற்கு 1,414 வாக்குகளும் ஷாலினிக்கு 1,261 வாக்குகளும் கிடைத்ததாக அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் அறிவித்தார்.
முன்னதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபாலு போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். அதேபோல் புத்ரா தலைவராக பத்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


