லிவர்பூல், அக்.1 –
லிவர்பூல் தாக்குதல் நட்சத்திரம் முஹமட் சாலா மீண்டும் தமது பழைய ஆட்டத்தரத்துக்கு திரும்புவார் என அந்த கிளப்பின் நிர்வாகி ஜூர்கன் குலோப் நம்பிக்கைக் கொண்டுள்ளார். அந்த இலக்கை நோக்கி முஹமட் சாலா கடுமையாக உழைத்து வருகிறார்.
செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய முஹமட் சாலா, இரண்டு மூன்று கோல் போடும் வாய்ப்புகளை நழுவ விட்டார். இதனால் 66 ஆவது நிமிடத்தில் சாலாவுக்குப் பதில், ஷெர்டான் சக்கிரியை மாற்று ஆட்டக்காரராக குலோப் கொண்டு வந்தார். கடந்த பருவத்தில் லிவர்பூல் அணியில் 44 கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்த சாலா, இந்த பருவத்தில் அதே ஆட்டத்தரத்தை வெளிப்படுத்துவதில் திணறி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற ஃபிபா விருதளிப்பு விழாவில் சிறந்த கோலுக்கான விருதை வென்ற சாலா, தமது பழைய ஆட்டத்தரத்தை மீட்க கடுமையாக உழைத்து வருவதாக குலோப் கூறினார். ஆனால் அவருக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என குலோப் கேட்டு கொண்டார்.


