கோலாலம்பூர், ஆக. 24-
மலேசியாவிற்கு தங்கம் பதக்கம் வென்றது குறித்து ஒரு கணித ஆசிரியரும் கராத்தே வீரருமான எம். மதிவாணி தமது மகிழ்ச்சியை தெரிவித்தார். பெண்களுக்கான குழு கராத்தே போட்டியில், ஷாகிலா ஜெப்ரி தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்டார்.
அதனைத் தொடர்ந்து நடந்த 2ஆவது ஆட்டத்தில் வியாட்நாம் வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் மதிவாணி நிலைமையை 1 என்ற புள்ளிகளில் மாற்றினார். அதன் பின்னர், ஸ்ரீ ஷார்மினி வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது ஆட்டத்தில் வெற்றி பெற்று மூவர் கொண்ட கராத்தே போட்டியில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
கராத்தே போட்டியின் மூலம் மலேசியாவிற்கு கிடைத்த 7ஆவது தங்கம் இதுவாகும். கடந்த 2 மாத காலமாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்த தமது தியாகத்திற்கு கிடைத்த வெற்றியென செராஸ் பிக்கோன் அனைத்துலக பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் மதிவாணி முருகேசன் கூறினார்.
முதல் முறையாக சீ போட்டியில் கலந்து கொண்ட தமக்கு இந்த வெற்றி அற்புதமானது என அவர் சொன்னார். அன்றாடம் காலை 6.30க்கு பயிற்சியைத் தொடங்கி, அதன் பிறகு பள்ளிக்குச் செல்வேன். பிறகு மாலையில் மீண்டும் பயிற்சியை மேற்கொள்வேன். இந்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதான் இந்த தங்கப்பதக்கம் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் கஸகஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் காயமடைந்து குணமடைந்த பின் மீண்டும் கராத்தே போட்டிக்குத் திரும்பிய தமக்கு இந்த வெற்றி அர்த்தம் பொதிந்த ஒன்று என்றும் மதிவாணி வர்ணித்தார்.


