மென்செஸ்டர், ஆக.27-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட், லெய்செஸ்டர் சிட்டியின் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கியது. முதல் பாதி ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்த மென்செஸ்டர் யுனைடெட் கோல் போடுவதில் தோல்வி கண்டது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பினால்டி வழங்கப்பட்டது.
எனினும் ரொமெலு லுக்காகூ அடித்த அந்த பினால்டியை லெய்செஸ்டர் சிட்டி கோல் காவலர் காஸ்பர் ஸ்மைக்கல் தடுத்து நிறுத்தினார். லெய்செஸ்டர் சிட்டியின் தற்காப்பு அரணை முறியடிக்க மாற்று வியூகமாக மார்கோஸ் ராஷ்போர்ட், மரோன் பெலாய்னியை நிர்வாகி ஜோசே மொரின்ஹோ களமிறக்கினார்.
மொரின்ஹோவின் வியூகம் 70 ஆவது நிமிடத்தில் பலனைத் தந்தது. ராஷ்போர்ட் அடித்த பந்தை வலைக்குள் புகாமல் தடுப்பதில் காஸ்பர் தோல்வி கண்டார். ஆட்டம் முடிவடைய எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இரண்டாவது கோலை மரொன் பெலாய்னி அடித்தார். இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் 9 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


