Homeமலேசியாதமிழன் என்பதை நான் பிரதிபலிக்கிறேன்; மலேசியர்கள் என்பதை நாம் பிரதிபலிப்போம்! -தனபாலன்

தமிழன் என்பதை நான் பிரதிபலிக்கிறேன்; மலேசியர்கள் என்பதை நாம் பிரதிபலிப்போம்! -தனபாலன்

(அனேகன்.கோம் இணையத்தள பதிவேட்டின் பிரத்தியேக நேர்க்காணல்)

சீ கால்பந்து போட்டியில் மலேசியா அணி அசைக்க முடியாத அணியாக உருவெடுத்திருப்பதோடு இறுதி சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. மலேசியாவின் இந்த வெற்றிகளுக்கு அனைத்து ஆட்டக்காரர்களும் முக்கிய பங்கு வகித்தாலும் அரையிறுதி சுற்றில் ஒரே ஒரு கோலின் வாயிலாக மலேசியா இறுதி சுற்றுக்குள் நுழைய காரணமாக விளங்கியவர் 22 வயதுடைய தனபாலன். அவரை அனேகன்.கோம் இணையத்தள பதிவேட்டிற்காக நேர்காணல் செய்தோம். அவரது நேர்க்காணல் பின்வருமாறு:

இப்போது மலேசியர்கள் உச்சரிக்கும் பெயரா தனபாலன் இருக்கு. உங்க மனநிலை எப்படி இருக்கு?

ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை கேட்குறதுக்கு. அதே நேரத்துல நிறைய பேரு நம்ம தமிழாளு கோல் அடிக்கணும்னு சொல்றாங்க. பேஸ்புக், வாட்சாப்லெ நான் பார்க்குறேன். தமிழாளு கோல் அடிக்கணும்னு சொல்ல கூடாது. யார் வேணும்னாலும் கோல் அடிக்கலாம். நம்ம மலேசிய குழு கோல் அடிக்கணும்னு சொல்லனும். அதான் முக்கியமா நான் நினைக்குறேன்.

“மீசை, தாடி நம் அடையாளம்”

எனக்கு இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள்னு எல்லாரும் ஆதரவு கொடுக்குறாங்க. நான் மீசை, தாடி வெச்சுருக்குறதுக்கு காரணமே நான் தமிழன்னு காட்டுறதுக்காகத்தான். அதுதான் நம்முடைய அடையாளம். அதே நேரத்துல கால்பந்து விளையாட்டுல ஒருத்தரால வெற்றி கிடைக்காது. அதற்கு அணியிலுள்ள எல்லா விளையாட்டாளர்களின் ஆதரவு இருக்கனும். இன்னைக்கு தனபாலன் ஒரு ஆளு எல்லாருக்கும் தெரியிறாருன்னா அதற்கு என் கூட விளையாடிவரும் மத்த விளையாட்டாளர்களும் காரணம். திடலிலுள்ள நான் தமிழனா பிரதிபலிக்குறேன். அதேவேளையில், மலேசியர்களா நாம் அனைவரும் பிரதிபலிக்கணும்னு கேட்டுகுறேன்.

 

நீங்கள் இப்போது எந்த அணிக்கு விளையாடி வரீங்க?

நான் தொடக்கத்துல நெகிரி செம்பிலான் அணியில விளையாடி வந்தேன். ஆனால், அதுல அதிகமா ரிசர்வ் விளையாட்டாளரா இருந்தேன். அதுக்கப்புறம் இப்போ பெல்க்ரா அணிக்கு விளையாடி வரேன்.

 

சீ கால்பந்து விளையாட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் இவ்வேளையில் வேறு எந்த அணியாவது உங்களை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றதா?

இதுவரைக்கும் அப்படி எதுவும் இல்லை.

“ரிசர்வ் விளையாட்டாளரா இருக்குறதைவிட முதன்மை ஆட்டக்காரரா இருக்கணும்”

எந்த அணிக்காவது விளையாடணும்னு ஏதாவது ஆசை இருக்கா?

அப்படி எதுவும் இல்லை. ஆனால், ஒரு கால்பந்து விளையாட்டாளராக எல்லா ஆட்டத்திலும் நான் விளையாடணும்னு நினைக்குறேன். போன வருஷம் நெகிரி செம்பிலான் அணியில இருந்தப்ப எனக்கு விளையாடுறதுக்கு அவ்வளவு வாய்ப்பு கிடைக்கல. அதிகமா ரிசர்வ் விளையாட்டாளராதான் இருந்தேன். அதனாலேயே, பெல்க்ரா அணிக்கு மாறி வந்தேன். இந்த அணிக்கு வந்த பிறகு முதன்மை விளையாட்டாளராக எல்லா ஆட்டத்திலும் இறங்கி என்னோடு முழு திறமையையும் காட்டிக்கிட்டு வரேன்னு நினைக்குறேன். அதனாலதான் எனக்கு சீ கால்பந்து போட்டியில முதன்மை விளையாட்டாளராக ஆடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. இதுக்கப்புறம் எந்த அணிக்கு நான் போனாலும் சரி. அது பெரிய அணியா இருக்கணும்னு இல்லை. நான் அதிகமாக விளையாடுறதுக்கான வாய்ப்பு கொடுக்கற அணியா இருந்தாலே போதும்.

 

உங்களுக்கு பிடித்த அனைத்துலக கிளப் எது?

எனக்கு பிடிச்ச கிளப் மன்செஸ்டர் யுனைடெட்தான்.

“கிரிஸ்டியானோ ரொனால்டோ என் ரோல் மாடல்”

எந்த தாக்குதல் ஆட்டக்காரர உங்களோட ரோல் மாடலாக கொண்டிருக்கீங்க?

ரியல் மாட்ரிட்டின் கிரிஸ்டியானோ ரொனால்டோதான் என்னோட ரோல் மாடல். அவர் நல்லா ஹெட்டிங்கில் கோல் போடக்கூடியவர். எனக்கு அவரு அந்த மாதிரி கோல் அடிக்குறது ரொம்ப பிடிக்கும்.

 

இந்த கால்பந்து துறையில உங்க வளர்ச்சிக்கு உங்கள் அப்பா எப்படி ஆதரவு கொடுத்தாரு?

என் அப்பா சின்ன வயசிலேந்து எனக்கு முழு ஆதரவு கொடுத்துருக்காரு. குறிப்பாக சொல்லணும்னா ஹெட்டிங்கில கோல் போடுறதை சொல்லி கொடுத்தாரு. சுவத்துல ஹெட்டிங் பண்ணி பழக சொல்லுவாரு. நானும் அவரு சொல்ற மாதிரி சுவத்துல ஹெட்டிங் பண்ணி பழகிக்கிட்டேன்.

 

தாய்லாந்து உடனான இறுதி ஆட்டம் எப்படி இருக்கும்ணு நினைக்குறீங்க?

கண்டிப்பாக கஷ்டமான ஆட்டமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். ஏன்னா நாங்க தாய்லாந்துகிட்ட இதுக்கு முன்னுக்கு ஆசியா தகுதி ஆட்டத்துல 3-0லே தோத்துறுக்கோம். அவுங்களும் நாங்க இறுதி ஆட்டத்துக்கு வரும்வோம்னு நினைச்சிருக்க மாட்டாங்க. ஜெயிக்குறது தோற்குறது அப்றோதான். முதல்ல கடுமையான ஆட்டத்தை கொடுக்கணும். நிச்சயமாக இந்த ஆட்டத்துல நாங்க கடுமையான ஆட்டத்தை கொடுப்போம்.

 

”என் மாமாவை என்னைக்கு மறக்க மாட்டேன்”

உங்களோட இந்த வளர்ச்சிக்கு யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புறீங்க?

பக்கிரிசாமி பிள்ளை

என்னோட சின்ன வயசிலேந்து இப்போ வரைக்கும் இருக்கும் பயிற்றுநர்கள், குடும்பம், நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்குறேன். குறிப்பாக, என் மாமா பக்கிரிசாமி பிள்ளைக்குத்தான் அதிகமாக நன்றி சொல்லணும். ஏன்னா என் அப்பா அடிப்பட்ட பிறகு என் குடும்ப பொறுப்ப சுமக்க வேண்டிய நிலைமை வந்துச்சு. ஆனா, என் மாமா என்கிட்ட வந்து நீ குடும்பத்தை பத்தி கவலை படாத. நான் பாத்துக்குறேன். நீ நல்லா பந்து விளையாடு. உன்னால சாதிக்க முடியும்னு சொன்னாரு. நான் இதுவரைக்கும் மீடியாலே அவரு பேரை சொன்னதில்லை. தனியாக அவரை பத்தி சொல்லணும்னு நினைச்சேன். இப்போ உங்க மூலமா அவருக்கு என்னோட நன்றியை கூறிட்டேன். அவரை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்.

சரிங்க, தனபாலன் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா அபார வெற்றி பெறணும், நம் அனைவரின் எண்ணமும் நிஜமாகனும்னு ரொம்ப எதிர்பார்க்குறோம். உங்களுக்கு எங்களது வாழ்த்துகளை அனேகன்.கோம் மூலமாக சொல்லிகுறோம்.

உங்களுக்கும் எங்களுக்கு விடாம ஆதரவு தெரிவித்துவரும் எல்லா மலேசியர்களுக்கும் நன்றியை தெரிவிச்சுக்குறேன். மலேசியா போலே!!!

 

spot_img

latest articles

explore more