கோலாலம்பூர், ஜூன் 2-
மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் பேசிவரும் ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே, காரணமின்றி உளறி வருவது ஏன்? என டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் கேள்வியெழுப்பினார்.
தமது அறிக்கை, ம.சீ.ச.வை நோக்கியது. அதற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை, ஷாரேட்ஸான் தெளிவுப்படுத்தினார்.
அம்னோவின் கடைநிலை உறுப்பினர்களுக்கும் தமக்கும் நல்லதொரு தொடர்பு உள்ளது. அதை அக்மால் சாலே அவர்களிடமே கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.
மக்களவையில், எதிர்க்கட்சியினரின் தாக்குதல்களிலிருந்து ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை, தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்காத்து வருகின்றோம்.
தமக்கும் அம்னோ அமைச்சர், துணையமைச்சர்களுக்கும் இடையிலான உறவு நல்ல முறையில் உள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சியினரின் தாக்குதல்களிலிருந்து, அக்கட்சியைச் சார்ந்த அமைச்சர், துணையமைச்சர்களைத் தாங்கள் தற்காத்து பேசியுள்ளோம்.
மேலும், பாங்கி தொகுதியிலுள்ள அம்னோவினரிடம், அவர்களுக்கும் தங்களுக்கும் உள்ள நல்லதொரு ஒத்துழைப்பைப் பற்றி அக்மால் சாலே கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம் என ஷாரேட்ஸான் கேட்டுக்கொண்டார்.
ம.சீ.ச.-வை ஷாரேட்ஸான் விமர்சித்ததைத் தொடர்ந்து, ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணியை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரும்படி, அக்மால் சாலே இதற்குமுன்பு அவருக்கு சவால் விடுத்திருந்தார்.


