கோலாலம்பூர், ஜூன் 3-
முன்னாள் ஆய்வு உதவியாளர் முஹம்மட் யூசோஃப் ராவ்தர் தொடுத்திருக்கும் சிவில் வழக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தரப்பில், அவரது வழக்கறிஞர் அசாதாரண விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றத்தில் இதற்குமுன்பு தாக்கல் செய்திருந்தார்.
அதில், பிரதமர் அவ்வழக்கில் விலக்கு பெரும் உரிமை உட்பட 8 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பிரதமரின் அந்த விண்ணப்பம் தொடர்பான வழக்கில், தங்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரி, பெரிக்காத்தான் நேஷ்னலின் லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின், கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார், பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி ஆகியோர் மனுவைப் பதிவு செய்துள்ளனர்.
அம்மூவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், அந்த மனுவைப் பதிவு செய்துள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு, தாம் பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானதாக, 32 வயது முஹம்மட் யூசோஃப் ராவ்தர் தொடுத்திருந்த சிவில் வழக்கு தொடர்பில், அம்மனு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மூவரின் மனு தொடர்பில், நீதிபதி ரோஸ் மாவார் ரொசாய்ன் முன்னிலையில் நாளை செவிமடுக்கப்படவுள்ளது.
அத்துடன், கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மற்றொரு வழக்கின் விசாரணை முடியும் வரையில், உயர்நீதிமன்றத்தில் முஹம்மட் யூசோஃப் ராவ்தர் தொடுத்திருக்கும் வழக்கை ஒத்திவைக்கக்கோரும் அன்வாரின் விண்ணப்பமும் அதில் செவிமடுக்கப்படவுள்ளது.
மேலும், சிவில் சட்ட நடவடிக்கையில் பிரதமருக்கு விலக்களிக்கும் சட்டவிதி குறித்து வாதிடுமாறு, நீதிபதி ரோஸ் மாவார் இரு தரப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


