கோலாலம்பூர், ஜூன் 5-
வங்கிகளில் வாகனங்களுக்கான கடனை முறையாக செலுத்த தவறும் உரிமையாளர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் அதிகாரப்பூர்வ வழிக்காட்டலை உருவாக்க வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது.
நடப்பில், வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில தரப்பினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வது குறித்து புகார்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அரசாங்கத்திற்கு தாம் அந்த பரிந்துரையை முன்வைப்பதாக, ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.
வாகனத்தைப் பறிமுதல் செய்ய வருபவர்கள் பெரிய கும்பலாக வருவதால், வாகன உரிமையாளர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் அச்சம் கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியது. சட்டத்தை கடைபிடிக்கும் ஒரு நாட்டில் இது நடக்கக் கூடாது என்று டத்தோ டி.முருகையா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சு, வாகனங்களைப் பறிமுதல் செய்வது தொடர்பான செயல்முறைகளை ஒருங்கிணைக்க ஓர் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலை அறிமுகப்படுத்த வேண்டும்.
மேலும், வாகன பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் தேசியப் போலீஸ் படை மூலம் சிறப்பு பயிற்சிகளுக்கும் பின்னணி குறித்த சோதணைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், அவர்களின் அடையாளத்தையும் தகுதியையும் உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டும் என டத்தோ டி.முருகையா பரிந்துரைத்தார்.
வங்கிகளும், உள்துறை அமைச்சின் அனுமதியும் உரிமமும் பெற்ற பாதுகாப்பு நிறுவனங்களை மட்டுமே வாகன பறிமுதல் நடவடிக்கைகளை நிர்வகிக்க நியமிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் பொது அமைதியை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், வாகன உரிமையாளர்கள், வாகன பறிமுதல் செய்பவர்கள் என இரு தரப்பினரையும் பாதுகாக்கும்,
அது தவிர, சட்டபூர்வமான முறையில், வாகனங்களைப் பறிமுதல் செய்வோரின் மீதான பொதுமக்களின் மனப்போக்கை சரிச்செய்யும் எனவும் டத்தோ டி.முருகையா குறிப்பிட்டார்.


