பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11-
லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் முகம்மது நாகேஸ்வரன் முனியாண்டி நேற்று தனது 38வது வயதில் காலமானார்.
இதனை லோவின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திண்ட் உறுதிப்படுத்தினார்.
நாகேஸ்வரன் மதம் மாறிய பின்னர், 2020ஆம் ஆண்டு அவர்களது மூன்று குழந்தைகளை பெர்லிஸுக்கு அழைத்துச் சென்று அவர்களை ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதால், குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, லோவுக்கு குழந்தைகளைப் பராமரிக்கும் உரிமையை வழங்கி பல நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன. 2019 டிசம்பரில் தற்காலிக உத்தரவு வழங்கப்பட்டு, பின்னர் 2021 மார்ச்சில் முழு பராமரிப்பு உரிமை வழங்கப்பட்டது. இதற்கிடையில், லோவுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து 2021 செப்டம்பரில் இறுதியானது.
லோ, 2019ஆம் ஆண்டு நாகேஸ்வரனால் தாம் துன்புறுத்தப்பட்டதாக கூறி, அவரை விட்டு பிரிந்தார். 2022 ஆரம்பத்தில், தனது மூன்று குழந்தைகளை மீட்க ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மதபோதகர் நஜிரா நந்தகுமாரி அப்துல்லாவின் பராமரிப்பில் இருந்த மூன்று பிள்ளைகள் மீண்டும் லோவுடன் இணைந்தன.
அதே ஆண்டு, குழந்தைகளின் மதமாற்றத்தை எதிர்த்து லோ நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். 2024 ஏப்ரலில், கூட்டரசு நீதிமன்றம், ஒரு குழந்தை மதம் மாறுவதற்கு முன் பெற்றோர் இருவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், லோவின் மூன்று குழந்தைகளும் இந்து மதத்திலேயே இருப்பார்கள் என்றும் தீர்ப்பளித்தது.
மூன்று குழந்தைகளையும் முஸ்லிம்களாக மாற்றுவதற்கான பெர்லிஸ் அரசாங்கத்தின் இறுதி மேல்முறையீடும் கடந்த ஏப்ரலில் நிராகரிக்கப்பட்டது.
குற்றப்பதிவைக் கொண்டிருந்த நாகேஸ்வரனுக்கு கிளந்தானில் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார்.
லோவுடனான குழந்தைகள் பராமரிப்பு உரிமை வழக்கின் போது அவரது குற்றப் பதிவு வெளியானது. இது, லோ தனது மூன்று குழந்தைகளின் பராமரிப்பு உரிமையைப் பெறுவதற்கு முன்வைத்த காரணங்களில் ஒன்றாக இருந்தது.
கடந்த 2019 மார்ச் 3ஆம் தேதி, சுங்கைப் பட்டாணியிலுள்ள வீட்டில் நாகேஸ்வரன் லோவுக்கு காயம் விளைவித்ததாக, 2023 ஜுலையில் செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் அதை மறுத்த வேளை பத்தாயிரம் ரிங்கிட் பிணையில் வெளியில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், வழக்கு விசாரணைக்கு காத்திருக்கும் வரை லோவையும் சாட்சிகளையும் அணுகக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இந்த குற்றவியல் வழக்கின் விசாரணை வரும் செப்டம்பரில் தொடங்குவதாக நீதிமன்றம் இதற்குமுன்பு தெரிவித்திருந்தது.


