Homeஅரசியல்துன் மகாதீரின் ஜப்பான் பயண செலவை ஏற்ற அரசாங்கத்தின் முடிவை சாடியது ம.சீ.ச. இளைஞர் பிரிவு

துன் மகாதீரின் ஜப்பான் பயண செலவை ஏற்ற அரசாங்கத்தின் முடிவை சாடியது ம.சீ.ச. இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், ஜூன் 15-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஜப்பானில் நடைபெறும் நிக்கேய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணத்திற்கு, 486,000 ரிங்கிட் வரை செலவு செய்ய அனுமதித்துள்ள அரசாங்கத்தின் முடிவை, ம.சீ.ச. இளைஞர் பிரிவு சாடியது.

மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், நிதி ஒதுக்கீடுகளை செய்வதில் அரசாங்கம் வழங்குகின்ற முன்னுரிமைகள் குறித்து, அப்பிரிவின் மத்திய செயற்குழு உறுப்பினர் லீ கோக் செங் கேள்வியெழுப்பினார்.

யார் உண்மையில் பசியோடு இருக்கிறார்கள்? மக்களா அல்லது தங்களை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் தாங்களா? எனவும் அவர் வினவினார்.

மலேசிய தொழிலாளர்களின் சராசரி ஆண்டு வருமானம் 25,000 ரிங்கிட்டுக்கு குறைவாக இருக்கும் நிலையில், வெறும் இரண்டு நாட்களுக்கு ஏழு பேரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட அரை மில்லியன் ரிங்கிட் ஒதுக்கத் தயாராக உள்ளது.

மொத்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு நபருக்கு சராசரியாக 69,000 ரிங்கிட் செலவிடப்படுகின்றது.

பயண நாட்கள், மூன்று இரவுகளுக்கு ஹோட்டல், வணிக வகுப்பு விமான டிக்கெட்டுகள், தினசரி அலாவன்ஸ், உணவு ஆகியவை இருந்தாலும், அந்நிதி ஒதுக்கீடு நியாயமற்றது.
ஒருவருக்கு எப்படி 69,000 ரிங்கிட் செலவாகும்?

சிறு வணிகர்கள் சிறிய உதவி கேட்டாலும் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர்.
உதாரணமாக, ஒரு சிறு வியாபாரி 5,000 ரிங்கிட் தொடக்க மானியம் கேட்டால், அவர்கள் பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு, அரசாங்கம் எளிதாக நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை ஒதுக்குகின்றது.

மக்களுக்கு சிக்கனம், வீண் செலவு குறைப்பு பற்றி பேசும் அரசாங்கம், அதே நேரத்தில் அரசியல் தலைவர்களின் பெரிய செலவுகளை அனுமதிக்கின்றது.

பொறுப்பற்ற இத்தகைய செலவுகளை உடனடியாக நிறுத்தவும், வெளிநாட்டு பயண ஒதுக்கீடு கொள்கைகளை முழுமையாக மறு ஆய்வு செய்யவும், தினமும் போராடும் சாமானிய மக்களின் தேவைகளுக்கு மீண்டும் முன்னுரிமை அளிப்பதிலும் அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென லீ வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more