கோலாலம்பூர், ஜூன் 25-
பெர்சாத்து கட்சி இளைஞர் பிரிவான அர்மாடாவின் நிதி முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில், அரசு வழக்கறிஞர் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளது.
கூட்டரசு நீதிமன்றத்தில், அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படுமென, அரசு வழக்கறிஞர் தரப்பு தம்மிடம் தெரிவித்ததாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
முன்னதாக, நம்பிக்கை மோசடி, சொத்து தவறாக பயன்படுத்தியது, பணமோசடி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து, மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சைட் சாடிக்கை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.
நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா, நூரின் பதருதீன் உள்பட மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி அகமத் ஜைடி இப்ராகிம் அத்தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த ஏழு ஆண்டு சிறை, இரண்டு பிரம்படிகள், 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்யும் சைட் சாடிக்கின் மேல்முறையீட்டை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின், சைட் சாடிக் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனக் கூறினார்.
அர்மாடா நிதியில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட் எடுக்க உத்தரவிட்டதில் அவருக்கு நேர்மையற்ற நோக்கம் இருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டனர்.
மேலும், அர்மாடா புமி பெர்சத்து எண்டர்பிரைஸ் (ABBE) வங்கிக் கணக்கில் இருந்து 120,000 ரிங்கிட் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை.
இதனால், பணமோசடி குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிலைநிற்கவில்லை எனவும் நீதிபதி கூறினார்.


