ஷா ஆலம், ஜூன் 26-
ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ள சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானிடம் தலைவர் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, மூடா கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை நடந்த மூடா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா ஐஷா அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
சைட் சாடிக் நீதிமன்றத்தில் தனது நேர்மையை நிரூபித்ததுடன், கட்சியின் மரியாதையை தொடர்ந்து பாதுகாத்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மலேசியாவில், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கட்சிகளின் எந்தவொரு தலைவர்களும் கட்சி பொறுப்பிலிருந்து விலகியதில்லை.
ஆனால், வழக்காடல் முழுவதும் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்த சைட் சாடிக்கின் செயல்வழி, மூடா கட்சி புதிய அரசியல் கொள்கையை வகுத்திருப்பதாக, அமிரா கூறினார்.
“சைட் சாடிக்கின் தலைமையில் மூடா கட்சி மேலும் வலுப்பெறும். எதிர்கால தேர்தல்களை எதிர்கொள்ள அவரால் கட்சியை வழிநடத்த முடியும்,” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு, பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மாடா நிதியில் முறைகேடு புரிந்ததாக சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளில் இருந்து சைட் சாடிக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து விடுவித்தது.


