கோலாலம்பூர், ஜூன், 30-
நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட், நாளை ஜூலை 1ஆம் தேதி கட்டாய ஓய்வு பெறவுள்ளார்.
அவருக்கு அடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தான் ஸ்ரீ டத்தோ அமர் அபாங் இஸ்கந்தார் அபாங் ஹாஷிம், ஜூலை 2ஆம் தேதி கட்டாய ஓய்வு பெறவுள்ளார்.
அவ்விருவரது பதவிகள் நீட்டிக்கப்படாவிட்டால், நாட்டின் நீதித்துறையில் சர்ச்சைகள் மேலும் மோசமாகுமென பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி எச்சரித்தார்.
அடுத்த ஆறு மாதங்களில், கூட்டரசு நீதிமன்றத்தின் மேலும் ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். அவர்கள்:
1. தான் ஸ்ரீ ஹஸ்னா டத்தோ முகம்மது ஹாஷிம் (மலாயா தலைமை நீதிபதி) – 14 நவம்பர் 2025 அன்று ஓய்வு
தான் ஸ்ரீ டத்தோ அப்துல் ரஹ்மான் செப்லி (சபா சரவாக் தலைமை நீதிபதி) – ஜூலை 2025 இல் ஓய்வு
3. தான் ஸ்ரீ நல்லினி பத்மநாதன் (கூட்டரசு நீதிமன்ற நீதிபதி) – 22 ஆகஸ்ட் 2025 அன்று ஓய்வு
4. டத்தோ ஸபாரியா முகமது யூசோப் (கூட்டரசு நீதிமன்ற நீதிபதி) – 10 அக்டோபர் 2025 அன்று ஓய்வு
5. டத்தோ ஹனிபா பாரிக்குல்லா (கூட்டரசு நீதிமன்ற நீதிபதி) – 22 நவம்பர் 2025 அன்று ஓய்வு
இதனால், கூட்டரசு நீதிமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்ட நீதிபதி பதவிகள் காலியாகவுள்ளன. இது நாட்டின் சட்ட நிர்வாகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த ஏழு நீதிபதிகளில், நான்கு பேர் – தான் ஸ்ரீ ஹஸ்னா, டத்தோ அப்துல் ரஹ்மான், டத்தோ ஸபாரியா, மற்றும் டத்தோ ஹனிபா – ஏற்கனவே ஆறு மாத கால சேவை நீட்டிப்பு பெற்றவர்கள் ஆவர்.
அவர்களைப் போல, நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் தான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தார் ஆகியோருக்கும் ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் இதனால், சட்டத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
இது அரசியல் நோக்கம் கொண்டதல்ல, மாறாக, நீதிமன்ற வழக்குகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நியாயமான கோரிக்கையாகும்.
கூட்டரசு நீதிமன்றத்தில் ஏற்படவுள்ள பாதிக்கு மேற்பட்ட நீதிபதி காலியிடங்கள், உயர்நீதிமன்றம் முதல் கூட்டரசு நீதிமன்றம் வரை வழக்குகளின் முன்னேற்றத்தை பாதிக்கும் என பல வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்றால், நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரம் குறித்து ஏற்கனவே உள்ள சர்ச்சைகள் மேலும் தீவிரமடையும்.
இவ்விவகாரத்தை அரசியல் தாக்குதலாகக் கருதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புறக்கணிக்கக்கூடாது.
நீதித்துறையின் அடுத்த தலைமைப் பதவி, கூட்டரசு நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக வழக்கறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நியமனம், தற்போதைய மூத்த நீதிபதிகளின் மூப்பு பட்டியலை மீறி, 2033 வரை நீதித்துறை தலைமையை மாற்றுவதற்கான திட்டமாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது மற்றும் துணை போலீஸ் தலைவர் தான் ஸ்ரீ ஆயூப் கான் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவில்லை போன்றவை, இந்த சர்ச்சைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினராக, நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரம் குறித்த இந்த சர்ச்சைகளை உரிய முறையில் கையாள வேண்டும் என பிரதமருக்கு நினைவூட்டுவது தனது கடமை என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி கூறினார்.


