கோலாலம்பூர், ஜூலை 1-
நாளை புதன் கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி மைமூன் துவான் மாட்டின் சேவையைப் பாராட்டும் விதத்தில் நாட்டிலுள்ள நீதிபதிகள் நேற்று கேஎல்ஐஏவிற்கு அருகிலிருக்கும் தங்கும் விடுதியில் ஒன்று கூடினர்.
தெங்கு மைமூனின் பதவி காலத்தை 6 மாத காலத்திற்கு நீட்டிக்க பலவேறு தரப்பினரும் அரசுக்கு நெருக்குதல் தொடுத்து வரும் நிலையில், நாட்டின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்று அரசு இன்னமும் தீர்மானிக்க முடியாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேற்கண்ட ஒன்று கூடல் நிகழ்ச்சியில் நாட்டின் நீதித் துறைக்கு தெங்கு மைமூன் ஆற்றிய சேவையை நீதிபதிகள் வெகுவாகப் பாராட்டி உரை நிகழ்த்தினர்.
நாட்டின் நீதித் துறையைச் சிறப்பான முறையில் தெங்கு மைமூன் நடத்தி, தீர்ப்புகளை நடுநிலைமையோடும் சுதந்திரமாகவும் அளித்திருப்பதாகவும் அதன் பின்விளைவுகளை அவர் பொருட்படுத்தாமல் தமது அப்பழுக்கற்ற சேவையை வழங்கியதாகவும் நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
இந்நிலையில் மேல் முறையீட்டு நீதிமன்ற தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஜூலை 2ஆம் தேதியும் கூட்டரசு நீதிபதி நளினி பத்மநாதன் ஆகஸ்டு 22ஆம் தேதியும் பதவி ஒய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பொன் முனியாண்டி


